Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளராக ப்ரோமோஷன் வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கான வேலைகளை அவர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கனிமொழிக்கு அறிவாலயத்தில் தனி அறை அமைக்கப்பட்டதன் பின்னணியில் பெரிய மாஸ்டர் ப்ளான் ஒன்று மறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
கலைஞரின் பேரன்..முதல்வர் ஸ்டாலினின் மகன் என்பதை தாண்டி அரசியலுக்கு அடியெடுத்து வைத்த சில மாதங்களிலேயே இளைஞரணி செயலாளர், எம் எல் ஏ, அமைச்சர், துணை முதல்வர் என கடகடவென அரசியல் க்ராஃப்பில் மேலோங்கி சென்றுவிட்டார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியோ அரசியல் வாரிசு என்றாலும் சினிமா நடிகராகவே முதலில் மக்களுக்கு அறிமுகமானார். 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் குதித்தார் உதயநிதி. 2019-ல் அவரது தந்தை ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இளைஞரணிக்கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏவாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். 2022 ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரானார். இதனையடுத்து கடந்த ஆண்டு தனது தந்தை கலைஞர் பாணியில் தனது மகன் உதயநிதியை துணை முதல்வராக நியமித்து அழகு பார்த்தார் முக ஸ்டாலின்.
ஆனால் என்னதான் துணை முதல்வராக இருந்தாலும் அது வெறும் பொறுப்பு தானே தவிர கட்சி பதவி அல்ல. திமுகவின் முக்கிய கூட்டங்களில் கூட உதயநிதியால் கலந்துகொள்ள முடிவதில்லை என உணர்ந்த ஸ்டாலின் புதுக்கணக்கை போட்டுள்ளார். இதனையடுத்து மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்க முடிவு செய்து உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் வழங்கப்போவதாக கூறப்படுகிறது. தற்போது திமுகவில் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகிய ஐவர் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை வழங்கவுள்ளார் ஸ்டாலின் என தகவல்கள் வெளியானது
ஒருவேளை உதயநிதி துணை பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டால் கலைஞரின் இன்னொரு வாரிசான ஸ்டாலின் சகோதரி கனிமொழியும் அதே பதவியில் இருப்பது சரியாக இருக்காது என கருதிய ஸ்டாலின் முதலில் கனிமொழிக்கு ப்ரோமோசன் வழங்க முடிவுசெய்துள்ளாராம். அதன் ஒரு முன்னோட்டமாகவே தற்போது அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனி அறை வழங்கி அவரை இருக்கையில் அமர்த்தி அழகு பார்த்துள்ளார் முக ஸ்டாலின்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்காக தான் கனிமொழியை தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் திருப்பி விட்டதாக எதிர் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் கனிமொழி விவகாரத்தில் ஸ்டாலின் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சொல்கின்றனர். அதன்படியே தலைமை கழகத்தில் உதயநிதியை நுழைக்கும் போது அது பிரச்னையாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதால் கனிமொழியிடம் பவர் இருக்கக் கூடிய ஒரு பதவியை ஒப்படைத்துவிட வேண்டும் என்பதற்காக புதிய பதவி உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் உதயநிதியின் துணை பொதுச்செயலாளர் பதவி குறித்த அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















