கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
எம்.பி கனிமொழிக்காக திமுக தலைமை கழகத்தில் புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதோடு சேர்த்து மாநில அரசியலில் ENTRY கொடுப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்கின்றனர். அறிவாலயத்தில் கனிமொழிக்கென தனி அறை உருவாக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் ஸ்டாலினின் கணக்கு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவிலேயே தலைமை கழக மாற்றம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகவிருப்பதாக பேச்சு அடிபட்டது. முக்கிய பதவிகளில் மாற்றம் வரவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதில் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன.
இந்தநிலையில் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கென தனி அலுவலக அறை திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறையை திறந்து வைத்து கனிமொழிக்கு வாழ்த்துகளை திறந்து வைத்தார். கனிமொழியிடம் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைப்பதற்காக தான் இந்த அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தலைமை கழகத்தில் புதிதாக ஒரு பதவியை உருவாக்கி, தற்போது துணை பொதுச்செயலாளராக இருக்கும் கனிமொழியிடம் அந்த பதவியை ஒப்படைப்பதற்கு ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. கனிமொழிக்கு பதிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை பொதுச்செயலாளர் ஆக வாய்ப்பிருக்கிறது. அதேபோல் பொதுச்செயலாளர் பதவியிலும் துரைமுருகனை தூக்கிவிட்டு டி.ஆர்.பாலு அல்லது கே.என்.நேருவிடம் ஒப்படைக்கலாமா என்ற பேச்சும் போய்க் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்காக தான் கனிமொழியை தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் திருப்பி விட்டதாக எதிர் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் கனிமொழி விவகாரத்தில் ஸ்டாலின் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சொல்கின்றனர். அதன்படியே தலைமை கழகத்தில் உதயநிதியை நுழைக்கும் போது அது பிரச்னையாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதால் கனிமொழியிடம் பவர் இருக்கக் கூடிய ஒரு பதவியை ஒப்படைத்துவிட வேண்டும் என்பதற்காக புதிய பதவி உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கனிமொழி மாநில அரசியல் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தொடர்ந்து தேசிய அரசியலில் இருந்து வரும் கனிமொழி, மாநில அரசியலுக்கு திரும்ப விரும்புவதாகவும், அதனால் வரும் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர். தேசிய அளவில் திமுகவின் முகமாக மாறியுள்ள கனிமொழியை சட்டப்பேரவை தேர்தலுக்கு மாநில அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற குரலும் திமுகவில் எழுந்து வருவதால் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.





















