நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
NEET UG Counselling 2025: அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் நிகர்நிலை/ மத்திய பல்கலைக்கழகங்கள், BSc நர்சிங், AIIMS, JIPMER, AMU மற்றும் BHU ஆகியவற்றுக்கு ஓர் ஒருங்கிணைந்த போர்ட்டல் வழங்கப்படுகிறது.

நீட் மருத்துவப் படிப்புகளில் சேர மத்திய அரசின் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? கூடாது? என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 15 சதவீத அளவுக்கு மத்திய அரசுக் கல்லூரிகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் 85 சதவீத அளவுக்கு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், அசாம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மாணவர்களுக்கு எழும் சந்தேகங்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு என்ன பதில்? பார்க்கலாம்.
விண்ணப்பிப்பது, சாய்ஸ் பில்லிங் செய்வது எப்படி?
மாணவர்கள், mcc.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். படிக்க விரும்பும் கல்லூரி மற்றும் படிப்புகளைத் தயார் செய்துகொள்ளவும். முன்னதாக யூசர் மேனுவலை முழுமையாகப் படிக்க வேண்டியது முக்கியம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
நீட் இளநிலை விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஆவணங்களைக் கையில் வைத்திருப்பது முக்கியம். தேவைக்கு, விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் செய்து வைத்துக்கொள்வது அவசியம்.
எப்படி, எப்போது பணம் செலுத்த வேண்டும்?
விண்ணப்பப் பதிவு செய்தவுடன், நீங்கள் பணம் செலுத்தும் பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள். நெட் பேங்க்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்த முடியும். வெற்றிகரமாக பணம் செலுத்திய பிறகுதான் நீங்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய முடியும்.
நான் நிரப்பக்கூடிய தேர்வுகளின் எண்ணிக்கைக்கு (number of choices) வரம்பு உள்ளதா?
இல்லை. நீங்கள் விரும்பும் பல தேர்வுகளை நிரப்பலாம். விருப்பத்தின் வரிசையில் அவற்றை சமர்ப்பிக்கவும். அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் நிகர்நிலை/ மத்திய பல்கலைக்கழகங்கள், BSc நர்சிங், AIIMS, JIPMER, AMU மற்றும் BHU ஆகியவற்றுக்கு ஓர் ஒருங்கிணைந்த போர்ட்டல் வழங்கப்படுகிறது.
தரவரிசை மதிப்பெண்ணின் அடிப்படையில், கிடைக்கக்கூடிய கல்லூரியை மதிப்பிட முடியுமா?
இளங்கலைப் பிரிவின் கீழ் மருத்துவக் கலந்தாய்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்தகால ஒதுக்கீட்டு நிலவரங்களை நீங்கள் சரிபார்க்கலாம். இருப்பினும், இவை ஒரு புரிதலுக்கு மட்டுமே. இந்த அடிப்படையில் இந்த ஆண்டுக்கான இடங்கள் ஒதுக்கப்படாது.
இருக்கை ஒதுக்கீட்டிற்கான தேர்வுகளை லாக் செய்வது (lock choices) அவசியமா?
ஆம். லாக்கிங் காலத்தில் உங்களின் தெரிவுகளை லாக் செய்ய வேண்டும். இல்லையெனில், கணினி உங்கள் தேர்வுகளை அட்டவணையின்படி தானாக ஒதுக்கிவிடும்.
2ஆம் சுற்றில் பங்கேற்க, சுற்று 1 இல் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டுமா?
இல்லை, சுற்று 1 க்குப் பிறகு இலவசமாக வெளியேறும் விருப்பம் உள்ளது. இருப்பினும், நீங்கள் கல்லூரியை மாற்ற விரும்பினால், சுற்று 1-ல் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் நீங்கள் ரிப்போர்ட் செய்து, மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://mcc.nic.in/





















