கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என்று பாஜக தலைகள் கூறிவந்த நிலையில், டிடிவி தினகரனும் கூட்டணி ஆட்சிதான் என்றும் யார் முதலமைச்சர் என்பதை அமித்ஷாதான் முடிவு செய்வார் என்றும் கூறியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கூட்டணி ஆட்சிக்கு எதிராக பேசும் ஈபிஎஸ்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை இப்போதே அனைத்துக் கட்சிகளும் தொடங்கி விட்டன. ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரச்சாரத்தை திமுகவும், ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை அதிமுகவும் கையெலெடுத்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தன்னுடைய பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்து கூட்டணி ஆட்சிக்கு எதிராக பேசிவருகிறார்.
முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே பாஜகவினர் 2026-ல் தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று கூறிவருகின்றனர். அமித்ஷா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை என தொடர்ந்து அனைவரும் கூட்டணி ஆட்சி என்பதையே வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மையில் ஒரு தனியார் நாளிதழுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று கேள்வி எழுப்பியதற்கு அதிமுகவில் இருந்து ஒருவர்தான் என்று சொன்னார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. 2026-ல் எங்கள் ஆட்சி தான் என்று பதிலடி கொடுத்து வருகிறார்.
பின்னணியில் அமித்ஷா
இசூழலில்தான் தேசியஜனநாயக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், 2026-ல் கூட்டணி ஆட்சிதான் என்று கூறியுள்ளார். அதேபோல், யார் முதலமைச்சர் என்பதை அமித்ஷா தேர்வு செய்வார் என்றும் கூட்டணி கட்சியில் இருக்கும் அனைவருக்கும் ஆட்சியில் பங்கு இருக்கும் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பின்னணியில் அமித்ஷா இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வளவு நாட்களாக பாஜக சார்பில் மட்டுமே கூட்டணி ஆட்சி என்று பேசி இபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுத்த நிலையில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் கூட்டணி ஆட்சி தொடர்பாக பேசசொல்லி பாஜக அசெண்மெண்ட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.






















