Erode East Bypoll: பயம்..! திமுக+ மீதா? தோல்வி மீதா? இடைத்தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், யாருக்கு லாபம்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.

Erode East Bypoll: அதிமுகவின் அறிவிப்பால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி எளிதாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, வரும் 5ம் தேதி அந்த தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறையும் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள, வி. சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்:
தற்போதைய சூழலில் திமுக மட்டுமே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அந்த கூட்டணியில் உள்ள தேமுதிகவும் அதே முடிவை எடுத்துள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில், இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதற்கு காரணம், திமுக மீதான பயமா? அதன் கூட்டணி மீதான பயமா? அல்லது தோல்வி மீதான பயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணி மிது பயமா?
திமுகவின் தொடர் தேர்தல் வெற்றிகளுக்கு அதன் வலுவான கூட்டணியே காரணம் என நம்பப்படுகிறது. அதே கூட்டணி தொடர்வதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அவர்களுக்கே வெற்றி சாத்தியம் என கூறப்படுகிறது. இதை உணர்ந்ததால் தான், அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகளே தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிகிறது. அதேநேரம், மக்கள் உடனான கூட்டணி மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உணர்ந்து, களத்தில் இறங்கி பணியாற்றி இருந்தால் எதிர்க்கட்சிகளின் பலம் நிச்சயம் கூடியிருக்கும் என்பதே நிதர்சனம். ஆளுங்கட்சியினருக்கு அவர்களது ஆட்சியின் நிலை என்ன என்பதையும் மக்கள் உணர்த்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
தோல்வியை கண்டு பயமா?
தேமுதிக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன சூழலில் இருக்கும் நிலையில், பாஜக தமிழ்நாட்டில் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் இன்னும் போராடி வருகிறது. அதிமுக தான் இன்றளவும் திமுகவிற்கு மாற்றாக கருதப்படுகிறது. ஆனால், 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என தொடர்ந்து அக்கட்சி தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதன் விளைவாகவே கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அக்கட்சி புறக்கணித்தது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், தோல்வியை எதிர்கொள்ள தயங்கினால், கட்சியை வலுப்படுத்துவது எப்படி? போட்டியே இன்றி திமுக வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் அதிமுகவின் பலம் தான் என்ன? என பல கேள்விகள் எழுகின்றன.
கோட்டை விடுகிறாரா ஈபிஎஸ்?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ”சட்ட-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துளது, நீட் தேர்வு ரத்து போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, கள்ளச்சாரய உயிரிழப்பு, திமுகவினர் அராஜகம்” என நூற்றுக்கணக்கான கண்டன அறிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதை அனைத்தையும் சரியான முறையில் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே, ஆட்சியின் மீது பொதுமக்களிடம் அதிருப்தி இருந்தால், அதனை தங்களுக்கான வாக்குகளாக அறுவடை செய்யலாம். ஆனால், அதை எதையுமே செய்யமால், இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியினரின் அராஜகம் இருக்கும் போன்ற வழக்கமான காரணங்களை சுட்டிக் காட்டி தேர்தலை புறக்கணிப்பது என்பது எப்படி அதிமுகவிற்கு பலனளிக்கும். தேர்தலில் போட்டியிடுவதால் தொடர் தோல்வி என்பதை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால், வீழ்ச்சியில் இருந்து அந்த கட்சி மீண்டு வந்துள்ளது என்பதை மக்களிடையே எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும்?
யாருக்கு பலன்?
புறக்கணிப்பு என்ற எதிர்க்கட்சிகளின் முடிவால், திமுக கடும் போட்டி என்பதே இன்றி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையே நிலவுகிறது. இத்தகைய வெற்றியால், திமுக பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதாக உருவாகும் பிம்பம், எதிர்காலத்தில் இன்னும் தங்களுக்கு ஆபத்தாக மாறும் என்பதை எடப்பாடி பழனிசாமி உணரவில்லையா? அல்லது இன்னும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே அவகாசம் உள்ளது, அதற்கான பயிற்சிகளமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பரிசீலிக்கலாம் என்பது குறித்து அவர் சிந்திக்கவில்லையா? தொடர் தோல்வியால் தனது இமேஜ் டேமேஜ் ஆவதை மட்டுமே கருத்தில் கொண்டு, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பாரே ஆனால் அதன் மொத்த பலனும் திமுகவிற்கு மட்டுமே என்பதே உண்மை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

