நீதித்துறையில் பெரிய மாற்றம்...ஐடியா கொடுத்த சட்டத்துறை அமைச்சர்...என்ன நடக்கப் போகிறது?
நீதித்துறையின் உயர் மட்டத்தில் நியமனம் செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் வகையில் கொலீஜியம் அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் உயர் மட்டத்தில் தற்போதுள்ள நடைமுறைகள் குறித்து கவலைகள் இருப்பதால், நீதித்துறையின் உயர் மட்டத்தில் நியமனம் செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் வகையில் கொலீஜியம் அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
Need to rethink collegium system of appointment, suggests Law Minister Kiren Rijiju https://t.co/QbtZ8CiBZe
— R K (@rkindoree) September 18, 2022
நீதித்துறையின் உயர் மட்டத்தில் நீதிபதிகளின் நியமனங்கள் நிலுவையில் உள்ளதற்கு காரணம் சட்டத்துறை அமைச்சர் அல்ல என்றும் அமைப்பே அதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் உதய்பூரில் இரண்டு நாள் யூனியன் ஆஃப் இந்தியா நீதித்துறை அலோசகர்களின் மாநாட்டின் தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட ரிஜிஜு, 'வளர்ந்து வரும் சட்டம்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, "நீதித்துறையின் உயர் மட்டத்தில் நியமனங்களை விரைவுபடுத்தும் வகையில் கொலீஜியம் அமைப்பைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.
பின்னர், செய்தியாளர்களை சந்திக்கும்போது இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "நடைமுறையில் உள்ள அமைப்பு சிக்கலை ஏற்படுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அது என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி மேலும் விவாதிக்கப்படும். நீதிபதிகள், சட்ட அலுவலர்கள் மற்றும் அழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது கருத்துக்களை முன் வைக்கிறேன்" என்றார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகளை நியமிக்க வேண்டும், பல நிலுவையில் உள்ளன எனக் கூறிய அவர், "இதுபோன்ற மாநாடுகளில் இதுபோன்ற பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்பட்டால், சட்ட அமைச்சரின் மனதில் என்ன இருக்கிறது, அரசு என்ன நினைக்கிறது என்பதை அங்கிருக்கும் மக்களுக்குத் தெரிந்துவிடும். நான் எனது கருத்துக்களை தெரிவித்துள்ளேன். அவர்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளேன்" என்றார்.
"நீதிபதிகளின் நியமனங்கள் நிலுவையில் இருப்பதற்கு அமைப்பே காரணம். அதற்கு சட்டத்துறை அமைச்சர் காரணம் அல்ல. அதனால்தான் (எனது கருத்துக்களை) உங்கள் முன் வைத்துள்ளேன்" என்றும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரும் மாநாட்டின் தொடக்க அமர்வில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
சமீப காலமாகவே, நீதித்துறையின் உயர் மட்டத்தில் நீதிபதிகளை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை அரசு ஒப்புதல் தர தாமதிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.