தள்ளாடியபடி விமான நிலையத்திற்குள் வந்த துணை முதல்வரின் மகன்! - அனுமதி மறுத்த ஊழியர்கள்!
தன்னால் நடக்க முடியாத அளவிற்கு ஜெய்மின் போதையில் இருந்ததாகவும், அவர் தள்ளாடியபடியே விமான நிலையத்திற்குள் வந்ததாகவும் தெரிகிறது.
குஜராத் மாநிலத்தின் துணை முதல்வர் நிதின் படேலின் மகன் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் இந்தியாவில் மது விற்பனை சக்கைப்போடு போட்டாலும் கூட, காந்தியின் பிறந்த மண்ணான குஜராத் மாநிலத்தில் மட்டும் அவரது கொள்கையின் நினைவாக இன்றும் மது விலக்கு அமலில் உள்ளது. குஜராத்தில் பொதுமக்கள் மது விற்பனை செய்வதும் , மது குடிப்பதும் சட்டப்படி குற்றமாகும் . இந்த நிலையில் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேலின் மகன் ஜெய்மின் படேல் குடிபோதையில் விமான ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 30. திங்கள் கிழமை அதிகாலை தனது மனைவி மற்றும் மகளுடன் அகமதாபாத் விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அதிகாலை நான்கு மணிக்கு கத்தார் விமான நிலையத்திற்கு சென்ற ஜெய்மின் படேல் கடுமையான போதையில் இருந்ததாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தன்னால் நடக்க முடியாத அளவிற்கு ஜெய்மின் போதையில் இருந்ததாகவும், அவர் தள்ளாடியபடியே விமான நிலையத்திற்குள் வந்ததால் சக்கர நாற்காலியில் அமர வைத்துதான் அழைத்து வரப்பட்டார் என்றும் கூறுகின்றனர்.
அதீத குடிபோதையில் இருந்ததால் விமான நிலைய சோதனை அதிகாரிகள் ஜெய்மின் படேலை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த துணை முதல்வரின் மகன் , அங்கிருக்கும் அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபாடிருக்கிறார். இதனை அங்கிருந்த விமான அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்திருக்கின்றனர். இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சயை ஏற்படுத்திய நிலையில் , துணை முதல்வர் நிதின் படேல் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்திருக்கிறார் .
View this post on Instagram
அதில் “ தனக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்ட சூழ்ச்சி இது. எனது மகன் தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக சென்றார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவரது மனைவி வீட்டிற்கு அழைத்து விவரத்தை சொன்னார். நாங்கள் பயணத்தை ரத்து செய்து வீட்டிற்கு வரும்படி அவர்களிடம் கூறினோம். அவ்வளவுதான் நடந்தது. எங்கள் எதிரிகள் எங்களுக்கு இருக்கும் நற்பெயரை கெடுப்பதற்காக இப்படியான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.” என தெரிவித்தார். ஆனாலும் தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது.