Air India Goes to Tata | டாடாவின் கைசேர்ந்த ஏர் இந்தியா.. ரூ.18000 கோடி முதலீடு.. இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..
டாடா ஏர்லைன்ஸ்.. 70 வருடங்களுக்கு முன் இதுதான் இந்த விமான நிறுவனத்தின் பெயர். பின்னர் டாடா ஏர்லைன்ஸ் அரசுடைமையாக்கப்பட்டது.
டாடா ஏர்லைன்ஸ்.. 70 வருடங்களுக்கு முன் இதுதான் இந்த விமான நிறுவனத்தின் பெயர். பின்னர் டாடா ஏர்லைன்ஸ் அரசுடைமையாக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் டாடாவிடமே வந்து சேர்ந்துள்ளது. ரூ.18,000 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஏற்கெனவே விஸ்தாரா, ஏர் ஏசியா என்று இரண்டு விமான நிறுவனங்களை வைத்திருக்கும் டாடாவுக்கு இது 3வது நிறுவனம்.
விஸ்தாராவின் விவரம்..
ப்ரீமியர் ரக விஸ்தாரா விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து இயக்கப்படுகிறது. இதில் டாடா சன்ஸ் குழுமத்தின் பங்கு 51%. சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பங்கு 49%.
ஏர்ஏசியா இந்தியா..
இது மலேசியாவின் ஏர்ஏசியாவுடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இதில் டாடா சன்ஸின் பங்கு 84%. ஏர்ஏசியா குழுமத்தின் பங்கு 16%.
கடன்காரரான மகாராஜா!
ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸுடன் இணைக்கப்பட்டதில் இருந்தே, ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. மார்ச் 2020 வரை 70,820 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்தது. 2017 18 காலகட்டத்தில் ரூ.5348.18 கோடி என்றிருந்த இழப்பு 2018 19 காலகட்டத்தில் 8556.35 என்று உயர்ந்தது. பின்னர் 209 20ல் ரூ.7982.83 கோடியாக அதிகரித்தது.
ஆனாலும் கடன் இருந்தாலும் ஏர் இந்தியாவுக்கு 4400 உள்நாட்டு ஸ்லாட்களும், 1800 சர்வதேச ஸ்லாட்களும் உள்ளன. இது மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகிறது.
ஏர் இந்தியா சில சுவாரஸ்ய தகவல்கள்:
டாடா குழுமம் 1932ல் விமான போக்குவரத்து சேவையில் இணைந்தது. தொழிலதிபர் ஜேஆர்டி ரத்தன் டாடா தான் இதனை உருவாக்கின்றார். அவர் தான் இந்தியாவின் முதல் உரிமம் பெற்ற பைலட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் டாடா ஏர்லைன்ஸ் அரசுடைமையானது. 1953ல் ஏர் இந்தியா அரசின் வசமானது. இருப்பினும், கடைசியாக 1977 வரை டாடா ஏர் இந்தியாவில் ஒரு பிடிமானத்தை வைத்திருந்தது.
இத்தகைய பெருமையையும் வரலாற்றையும் கொண்ட ஏர் இந்தியா டாடாவின் வசமாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகையானது 61,562 கோடி ரூபாய். இதனால் தான் அதனை விற்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனையானது, பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின், முயற்சிகளுக்கு மத்தியில் இந்தியாவின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவை, டாடாவுக்கு விற்பனை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் 100 சதவீதம் பங்கினை டாடாவுக்கு விற்பனை செய்வதன் மூலம் 2,700 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணித்துக் கூறப்படுகிறது.