Tesla Showroom: முதல் காருக்கு யானை விலையை நிர்ணயித்த டெஸ்லா - மும்பையில் ஷோரூம் திறந்தாச்சு - மாடல் Y எப்படி?
Tesla Showroom Model Y Car: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் ஷோ ரூம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.

Tesla Showroom Model Y Car: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் கார் மாடலான, Y-யின் தொடக்க விலை ரூ.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் டெஸ்லா ஷோரூம்:
சர்வதேச மின்சார கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெஸ்லா நிறுவனத்தின், இந்திய சந்தைக்கான முதல் ஷோரூம் மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது. பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள மேக்கர் மேக்சிட்டி மாலில் இடம்பெற்றுள்ள இந்த விற்பனை தளத்தை, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். நீண்ட கால சிக்கல்களுக்குப் பிறகு, ஒருவழியாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டெஸ்லா கார் அறிமுகமாகியுள்ளது. உள்நாட்டு சந்தைக்கான முதல் காராக மாடல் Y விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெஸ்லா மாடல் Y கார் விலை அறிவிப்பு:
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான டெஸ்லாவின் முதல் எஸ்யுவி காரான, மாடல் Y இரண்டு வேரியண்ட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடக்க விலை 69 ஆயிரத்து 766 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 60 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை கார் மாடலானது ரியர் வீல் ட்ரைவ் அம்சத்தை கொண்டுள்ளது. அதேநேரம், ரியர் வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட நீண்ட ரேஞ்ச் கொண்ட காரின் விலையானது 68 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்களாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக விதிக்கப்படும் இறக்குமதி வரி மற்றும் பயண செலவுகளால், கார் மிகவும் உயர்ந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அடிப்படை ரியர் வீல் ட்ரைவ் வேரியண்ட்களின் விநியோகம் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டிலும், லாங் ரேஞ்ச் ரியர் வீல் ட்ரைவ் வேரியண்டின் விநியோகம் நடப்பாண்டின் நான்காவது காலாண்டிலும் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
With a Tesla Model Y, you don’t need a tent to go camping. $TSLApic.twitter.com/Jten64NOKJ
— TeslaPulse (@teslapulsee) July 13, 2025
வெளிநாடுகளில் டெஸ்லா மாடல் Y கார் விலை
அமெரிக்காவில் இந்த மாடல் Y காரானது, 44 ஆயிரத்து 990 அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 37 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 500 யுவான்கள் அதாவது, சுமார் 32 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் சீனாவில் தொழிற்சாலை அமைத்து அங்கு கார்களை உற்பத்தி செய்து வருவதால் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. ஜெர்மனியில் டெஸ்லாவின் மாடல் Y காரானது 45 ஆயிரத்து 970 யூரோஸ் அதாவது சுமார் 46 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் மாடல் Y காரின் விலை மிகவும் அதிகமாக இருப்பது, கார் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா மாடல் Y கார் - முன்பதிவு’
இன்று முன்பதிவு செய்யும் பயனர்கள் முன் தொகையாக 22 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் இந்த முன்பதிவு தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது எக்காரணத்தை கொண்டு திருப்பி அளிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 வண்ண விருப்பங்கள் வழங்கப்படுகின்றன.
டெஸ்லா மாடல் Y கார் அம்சங்கள்:
உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் டெஸ்லா நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவு விலை காராக மாடல் Y எஸ்ய்வி திகழ்கிறது. உட்புறத்தில் பயணங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு சொகுசு அம்சங்களை இந்த கார் கொண்டுள்ளது. அதன்படி, ஹீடட் மற்றும் வெண்டிலேடட் இருக்கைகள், இரண்டாவது இருக்கை பயணிகளுக்கும் டச் ஸ்க்ரீன், ஆட்டோபைலட் ட்ரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள், ஓவர் தி ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளன. மசெண்ட்ரல் கண்ட்ரோல் ஹப்பாக 15 இன்ச் டச் ஸ்க்ரீனையும், 8 எக்ஸ்டீரியர் கேமராக்கள், பனோரமிக் கிளாஸ் சன்ரூஃப் ஆகியவற்றும் பயணிகளுக்கும், பொருட்களுக்கும் போதுமான இடவசதியையும் கொண்டுள்ளது. முற்றிலும் ஆட்டோ பைலட்டில் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்களை, விருப்ப அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.
அட்டகாசமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டு, சர்வதேச அளவில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன.
டெஸ்லா மாடல் Y கார் - பேட்டரி விவரங்கள்:
ரியர் வீல் ட்ரைவ் எடிஷனானது 60Kwh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 5.9 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் ரேஞ்ச் வேரியண்டானது 75Kwh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 622 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 5.6 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது.
டெஸ்லாவிற்கான சவால் என்ன?
அதிகபட்ச விலை இருந்தபோதிலும், டெஸ்லா இந்தியாவின் பணக்கார நகர்ப்புற பயனர்களை குறிவைத்துள்ளது. அதன்மூலம் BMW மற்றும் Mercedes-Benz போன்ற பிரீமியம் மின்சார வாகன சந்தை பிரிவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றளவும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தான் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மின்சார வாகன பிரிவு படிப்படியாக விரிவடைந்து வர, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற வெகுஜன சந்தை உற்பத்தியாளர்கள் முன்னணியில் உள்ளனர். வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்ட வரிச் சலுகைகள் மற்றும் சலுகைகள் மூலம், இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த கார் விற்பனையில் மின்சார வாகனங்களை 30% ஆக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது. தற்போது இது வெறும் 4% ஆக மட்டுமே உள்ளது.





















