Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
பாஜகவை வைத்து அதிமுக கூட்டணிக்குள் அன்புமணி சென்றுவிட்டால், மத்திய அரசின் அதிகார பலம் மூலம் கட்சி அன்புமணி வசம் போய்விடும் என்பதால் அவருக்கு முன்பாகவே அதிமுக கூட்டணியில் இணைந்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறாராம் ராமதாஸ்.
கடந்த ஆண்டு புதுவையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து இருவரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தந்தை மகன் பிரச்சனை தானே சீக்கிரம் சரி ஆகிவிடும் என்று பாமக தொண்டர்கள் நினைக்க கடந்த 7 மாதங்களை தாண்டியும் இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
சமாதான பேச்சு வார்த்தைக்கு ஆடிட்டார் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் முயற்சி செய்தும் ஒன்றும் நடந்த பாடில்லை. நான் தான் பாமக தலைவர் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். இதனிடையே, மாநில நிர்வகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு முக்கிய நிர்வாகிகளை வைத்து செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார் ராமதஸ்.
இச்சூழலில் தான் திமுக-வை கடுமையாக விமர்சித்து வந்த அன்புமணி கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் திமுக தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மறுபுறம் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ராமதாசை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதேபோல், விசிகவினரும் கடந்த சில நாட்களாக ராமதாசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூழலில் இப்படி இருக்கு டெல்லி சென்ற அன்புமணி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதை முன்வைத்து பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த ராமதாஸ் பாஜக-வை வைத்து அதிமுக கூட்டணிக்கு அன்புமணி சென்று விட்டால் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்காது என்று நினைப்பதாக சொல்கின்றனர். அன்புமணியால் இப்போது உள்ள சூழலுக்கு எப்படியும் திமுக கூட்டணிக்குள் செல்ல முடியாது என்பதால், அதிமுக கூட்டணி தான் அவருக்கான ஒரே நல்ல சாய்ஸாக இருக்கிறது. இதனால், அவர் பாஜக கூட்டணியை வைத்து அதிமுகவிற்குள் செல்வதற்குள் நாம் எப்படியாவது அந்த கூட்டணிக்குள் நுழைந்து விட வேண்டும் என்று காய் நகர்த்துகிறாராம் ராமதாஸ். அப்படி அதிமுக கூட்டணிக்குள் நுழைந்துவிட்டால் கட்சியை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட முடியும் என்றும் மோடிக்கு தான் நெருக்கம் என்பதால் இது சாத்தியமான ஒன்று என்று ராமதாஸ் நம்புவதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.





















