கோவையில் பூட்டிய கடைக்குள் நுழைந்த கொள்ளையன் - மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த வியாபாரி
’’சிசிடிவி கேமரா பொருத்தி செல்போனுடன் இணைக்கப்பட்டு இருந்ததால் எங்கிருந்தாலும் கடையில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்க முடியும்’’
கோவை அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் வசிப்பவர் சித்திக் (32). இவர் சித்ரா பகுதியில் கணினி மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது கடையை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார். அது அவரது செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் கடையில் நடக்கும் நிகழ்வுகளை வேறு பகுதியில் இருந்தாலும், செல்போனில் பார்க்க முடியும். இந்நிலையில் இன்று காலை 4 மணி அளவில் சித்திக் தனது செல்போனை பார்த்தார். அப்போது பூட்டியிருந்த தனது கடைக்குள் ஒரு ஆசாமி நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ஆசாமி ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அதே பகுதியில் வசிக்கும், தனது நண்பரான ஆங்கில பத்திரிகை நிருபர் வில்சன் என்பவருடன் தொடர்பு கொண்டார். இவர்கள் இருவரும் காரில் சித்ரா பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த ஆசாமி கடைக்குள் பணம் எதுவும் கிடைக்காததால் சித்ரா பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காந்திபுரம் செல்லும் அரசு பேருந்தில் அந்த நபர் ஏறினார். அப்போது அங்கு சென்ற சித்திக்கும், வில்சனும் அந்த நபரை அடையாளம் கண்டுள்ளனர். அந்த நபர் பேருந்தில் ஏறுவதைப் பார்த்து, காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அதே பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்தில் வைத்து அந்த ஆசாமியை இருவரும் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அந்த ஆசாமி தான் வைத்திருந்த கூர்மையான இரும்பு ஆயுதத்தால் அவர்களை தாக்க முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட இருவரும் சேர்ந்து அந்த ஆசாமி மடக்கிப் பிடித்தனர். பின்னர் பீளமேடு காவல் நிலையத்திற்கு முன்பாக பேருந்தை நிறுத்தச் செய்து, அந்த நபருடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அந்த நபரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை விசாரணையில் அந்த ஆசாமி தனது பெயரை சரவணன் (59) என்று கூறியுள்ளார். அந்நபரிடம் இருந்து இரும்பு ராடு, கத்தி போன்ற கூர்மையான இரும்பு கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சரவணனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையனை துணிகரமாக மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த பத்திரிகையாளர் வில்சன் மற்றும் வியாபாரி சித்திக் ஆகியோரை காவல் துறையினர் வெகுவாக பாராட்டினர்.
பிறந்தநாள் போஸ்டர் வேண்டாம் என்ற செந்தில்பாலாஜி-மறுநாளே போஸ்டர் ஒட்டி விஸ்வாசம் காட்டிய உ.பிகள்