Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!
தனது நிலத்தை போலி ஆதார் கார்டு செய்து பத்திர பதிவு செய்த பாஜக நிர்வாகி கண்மணி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர் எஸ் பி அலுவலகத்தில் முன்னாள் ஊரட்சி மன்ற தலைவர் ஆர்ப்பாட்டம் செய்த சம்பம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நந்திபெண்டா பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பையன் மகன் சம்பத். இவர் வெலக்கல்நத்தம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கு சுமார் 4 ஏக்கர் அளவிலான நிலம் இருந்து வந்துள்ளது. அதனை திருப்பத்தூர் மாவட்டத்தின் பிஜேபியில் முக்கிய பொறுப்பாளராக உள்ள கண்மணி என்பவர் சின்னப் பையனின் ஆதார் கார்டை போலியாக தயார் செய்து அதன் மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு 20 சென்ட் அளவிலான நிலத்தை பத்திர பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சம்பத் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகம் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகத்தில் பலமுறை கண்மணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது சொத்தை மீட்டு தர வேண்டும் எனவும் புகார் அளித்து வந்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆத்திரம் அடைந்த சம்பத் இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் வந்து திடீரென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் அது மட்டும் இன்றி தர்ணாவிலும் அமர்ந்தார்.
இதனால் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் சம்பத் குடும்பத்தினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்பி ஸ்ரேயா குப்தா தனி டிஎஸ்பி மூலன் இந்த புகார் மனு மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த புகாரை விசாரித்த டிஎஸ்பி இன்னும் பத்து நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து சம்பத் குடும்பத்தினர் சென்றனர். எஸ்பி அலுவலகத்தில் கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.





















