பிறந்தநாள் போஸ்டர் வேண்டாம் என்ற செந்தில்பாலாஜி-மறுநாளே போஸ்டர் ஒட்டி விஸ்வாசம் காட்டிய உ.பிகள்
’’வரும் 29ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு போஸ்டர் வேண்டாம் என செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து நேற்று அறிவிப்பு சென்ற நிலையில் இன்றே மாவட்டம் முழுவதும் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது’’
கரூரில் எப்பவும் அரசியல் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் இருக்கும். இந்நிலையில் வருகின்ற 29ஆம் தேதி தமிழ்நாடு மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உடன்பிறப்புகள் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சார்பாக கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் தலைமையில் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழ்நாடு மின்சார துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் மற்றும் அவரது நலம் விரும்பிகள் யாரும் அவரை வாழ்த்தும் விதமாக வால்போஸ்டர், சுவரொட்டிகளும், டிஜிட்டல் பேனர், நாளிதழில் விளம்பரம், தொலைக்காட்சியில் விளம்பரம் அளிக்க வேண்டாம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தனது பிறந்த நாளை எப்போதும்போல் எளிமையாக கொண்டாடி வரும் மின்சாரத் துறை அமைச்சர் கடந்த ஆண்டு திமுக கட்சியில் உள்ள அவரது விசுவாசிகள், மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி, பல்வேறு இடங்களில் கேக் வெட்டி, நாள் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி இந்த ஆண்டு பிறந்தநாளை எனது உடன் பிறப்புகளும், விசுவாசிகளும், சுவரொட்டிகள் பேனர்கள் வைத்து கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
காரணம் இவரது அரசியலில் பல்வேறு நிலையில் உயர்ந்து கொண்டு வருவதால் இதனை பிடிக்காத சில நபர்கள் ஏதாவது சித்தரித்து தலைமைக்கு புகார் அளிக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தவிர்த்திருக்கலாம் என ஒரு சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். திமுக மாவட்ட நிர்வாகம் தனது உடன் பிறப்புகள் மற்றும் விசுவாசிகளுக்கு நேற்று அறிவிப்பு வழங்கிய நிலையிலும் இன்று மின்சாரத்துறை அமைச்சர் உடன்பிறவா விசுவாசிகள் கரூர் மாவட்டத்தில் தற்போது சுவரொட்டிகள் ஒட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனினும் அவரது பிறந்த நாளில் இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் இருக்க வாய்ப்புகள் குறைவு. அவரது பல்வேறு பணிச்சுமை காரணமாகவும், ஒருவேளை இந்தப் பிறந்தநாளில் மின்சாரத்துறை அமைச்சர் கரூரில் இருந்தால் ராமேஸ்வரம் பட்டியில் உள்ள அவரது இல்லம், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகம், கௌரி புரத்தில் உள்ள திமுக அலுவலகம், மாவட்ட நூலகம் அருகே உள்ள எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அவரது உடன்பிறப்புக்கள் அதிக அளவில் வாழ்த்து சொல்ல வரும் நிலையில், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்களின் நலன் கருதி மின்சாரத்துறை அமைச்சர் வி .செந்தில் பாலாஜி இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை கரூரில் கொண்டாடுவது தவிர்த்து தலைநகரத்தில் கொண்டாட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.