TVK Vijay Madurai Meeting | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்
மதுரையில் வரும் செப்டம்பர் மாதம் மாநில மாநாட்டை நடத்தி, 2026 தமிழ் நாட்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தற்போது இருக்கும் இதே கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அதிமுக பாஜகவுடன் இணைந்தும் தேர்தலை சந்திக்க உள்ளது. முன்னதாக கட்சி ஆரம்பித்த போதே பாஜக கொள்கை எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் அறிவித்த விஜய் அதிமுக விசயத்தில் மட்டும் சாப்ட் டோனையே கையாண்டு வந்தார்.
இதனால் சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து விஜய் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக அதிமுக - தவெக முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தவெக தரப்பு பல்வேறு நிபந்தனை வைத்ததால் அப்செட்டான அதிமுக அதனை நிராகரித்து விட்டு பாஜக கூட்டணிக்கு சென்றதாகவும் தகவல் வெளியானது. இச்சூழலில் விஜய்-க்கு இருந்த முக்கியமான ஒரு கூட்டணி வாய்ப்பு கைநழுவி சென்றதை தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் தனித்து போட்டியிட்டு தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அதற்கான பணிகளில் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் கட்சி ரீதியிலான 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்தது, பூத் ஏஜண்டுகள் நியமனம் மற்றும் பூத் ஏஜண்டுகள் பயிற்சி முகாம் என்று விஜய் கட்சி வேலைகளை தீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் கூட கோவையில் பூத் ஏஜண்டுகள் மா நாட்டை நடத்தினார் விஜய். இதனைத்தொடர்ந்து அடுத்த பூத் ஏஜண்ட் மாநாடு சென்னை அல்லது காஞ்சிபுரத்தில் நடத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இச்சூழலில் தான் வரும் செப்டம்பர் மாதம் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக சொல்கின்றனர். அந்த வகையில், மதுரையில் மாநில அளவிலான பிரமாண்ட மா நாட்டை நடத்தவும், அந்த மாநாட்டின் போது முதற் கட்டமாக 100 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் விஜய் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி எந்தெந்த தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்பது தொடர்பான வேலைகளை தேர்தல் வியூக நிறுவனத்திடம் விஜய் ஒப்படைத்துள்ளதாகவும் சொல்கின்றர். அந்த வகையில் எந்த தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது தொடர்பான மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட பட்டியல் விஜயிடம் தேர்தல் வியூக நிறுவனம் அளிக்கும் என்றும் விஜய் இறுதி செய்து அதை மாநாட்டில் அறிவிப்பார் என்ற தகவலும் வெளியாகிள்ளது. இதற்கான வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.




















