RISAT 1B Satelite: பாதுகாப்பின் உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - 22 மணி நேர கவுண்-டவுன்
ISRO RISAT 1B Satelite: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பாதுகாப்பு மற்றும் வானிலை கண்காணிப்பிற்கான, RISAT - 1B செயற்கைகோள் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ISRO RISAT 1B Satelite: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் PSLV-C61 XL ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள ராக்கெட்டிற்கான கவுண்டவுன் இன்று காலை தொடங்குகிறது.
RISAT - 1B செயற்கைகோள் - 22 மணி நேர கவுண்டவுன்
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தனது அடுத்த விண்வெளி இலக்கிற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, நாளை EOS - 09 எனப்படும் RISAT - 1B செயற்கைகோளை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது. நாளை காலை 5.59 மணியளவில் புவிவட்டப்பாதையை நோக்கி, இந்த செயற்கைகோள் தனது பயணத்தை தொடங்க உள்ளது. PSLV-C61 XL ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்வெளிக்கு செல்ல உள்ளது. அதன் முடிவில் 1,710 கிலோ எடையிலான இந்த செயற்கைகோளானது, 529 கிமீ சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான 22 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 7.59 மணிக்கு தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இந்தியா விண்ணில் செலுத்த உள்ள 101வது ராக்கெட் இதுவாகும்.
🛰️ ISRO prepares for its 101st Launch mission
— ISRO (@isro) May 16, 2025
🚀 PSLV-C61 set to deploy EOS-09
📅 18 May 2025 | 5:59 AM IST |
📍 FLP, SDSC SHAR
📺 Watch Live from 5:29 AM https://t.co/cJ4NwoMeaU#ISRO #ISRO101 #PSLVC61
5 ஆண்டுகால ஆயுள்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் கடந்த 1993ம் ஆண்டு முதல் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புவிவட்டப்பாதையின் பல்வேறு பகுதிகளுக்கு இதுவரை 60 செயற்கைகோள்கள், இந்த ராக்கெட்டுகள் மூலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளன. அந்த வரிசையில் 61வது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள, RISAT - 1B செயற்கைகோளானது 5 ஆண்டுகள் வான்வெளியில் இந்தியாவிற்கான பல்வேறு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
RISAT செயற்கைகோள்களின் ராணுவ முக்கியத்துவம்:
RISAT எனப்படும் ரேடார் இமேஜிங் சாட்டிலைட் சீரிஸின் 7வது செயற்கைகோளாக, EOS - 09 திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் சக்திவாய்ந்த C - பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சுர் ரேடார் இடம்பெற்றுள்ளது. இது இரவு, பகல், மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலையில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் வல்லமை கொண்டது. புதிய செயற்கைகோளானது இந்திய பாதுகாப்பு படைக்கு திட்டமிடுதலுக்கு ஏற்றவாறு நிகழ்நேர தரவுகளை வழங்கக் கூடியது. எல்லை கண்காணிப்பு, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பங்களிக்கும் திறன் கொண்டது. பேரிடர் மேலாண்மை, விவசாய கண்காணிப்பு மற்றும் இயற்கை ஆதாரங்களை கண்டுபிடிப்பது ஆகிய பணிகளும் உதவக்கூடியது. அதன்படி, EOS - 09 செயற்கைகோளானது இந்தியாவின் வான்வழி கண்காணிப்பு திறன், திறமையான தொழில்நுட்ப நிர்வாகம் மற்றும் பேரிடர்களின்போது மீட்பு பணி ஆகியவற்றில் நாட்டின் திறனை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பணிகளில் செயற்கைகோள்:
அண்மையில் பொதுநிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “செயற்கைக் கோள் மற்றும் ட்ரோன்களின் உதவியின்றி நாட்டின் முழு பாதுகாப்பை உறுதி செய்வது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக அண்டை நாடுகள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதால் வான்வழி பாதுகாப்பு மிகவும் முக்கியமானது” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தான், அண்மையில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, மேலும் ஒரு RISAT செயற்கைகோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இது கடந்த 15 ஆண்டுகளாக இந்திய பாதுகாப்பை வான்வழி கண்காணிப்பு மூலம் உறுதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
RISAT சீரிஸ்: வான் பாதுகாப்பு:
கடந்த 2008ம் ஆண்டு அரங்கேறிய மும்பை தீவிரவாத தாக்குலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக RISAT செயற்கைக்கோளை ஏவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு என இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்டு இவை உருவாக்கப்பட்டன. 24 மணி நேரமும் எந்தவொரு மோசமான வானிலை சூழலிலும் படம் பிடிக்கும் வகையில் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டது. நாட்டின் முதல் ரேடார் இமேஜிங் சாட்டிலைட்டானது, கடந்த 2009ம் ஆண்டு இஸ்ரேலின் உதவியுடன் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட RISAT-1 செயற்கைகோள் 2012ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வரிசையில் RISAT-2, RISAT-1, RISAT-1A, RISAT-2B, RISAT-2BR1, and RISAT-2BR2 ஆகிய செயற்கைகோள்கள் அடங்கும். அண்மையில் இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூரிலும் ரிசாட் செயற்கைகோள்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
RISAT - 1B ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
அண்மையில் அரங்கேறிய பஹல்காம் தாக்குதல் நாட்டின் எல்லை கண்காணிப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துகிறது. அதன்படி, தனது அதிநவீன தொழில்நுட்பத்துடன் RISAT-1B, இந்தியாவின் வான்வழி கண்காணிப்பை பலப்படுத்துகிறது. RISAT சீரிஸானது RISAT-2 இன் அடிப்படை இமேஜிங்கிலிருந்து RISAT-2BR1 இன் துல்லிய இமேஜிங்கிற்கு மேம்பட்டுள்ளது. RISAT-1B அதே தொழில்நுட்பத்தை தொடர்கிறது. கடந்த 2016ம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிலும் இந்த செயற்கைகோள் சீரிஸ் ராணுவத்திற்கு உதவியது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் நிறைந்த உலகில், RISAT-1B என்பது ஒரு செயற்கைக்கோள் மட்டுமல்ல. பாதுகாப்பிற்கான உறுதியான கேடயமாகும்.





















