(Source: ECI/ABP News/ABP Majha)
வள்ளியூர் அருகே உதவி பங்குதந்தை தூக்கிட்டு தற்கொலை - மக்கள் அதிர்ச்சி
ஓராண்டாக பணிபுரிந்து வழியனுப்பு விழா நடைபெறும் நேரத்தில் ஆலயத்தில் பணிபுரிந்த உதவி பங்கு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரிலுள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருப்பவர் ஆரோக்கியதாஸ்(30). சென்னை அடுத்த அரக்கோணத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஓராண்டாக வள்ளியூரில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் உதவி பங்குதந்தையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலயத் திருவிழாவான 10 ஆம் திருவிழா நடந்து முடிவடைந்து உள்ளது. அதோடு அங்கு பங்கு தந்தையாக பணிபுரிந்த ஆரோக்கிய தாஸ்க்கு நேற்றோடு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனால் அவர் வள்ளியூரிலிருந்து பணி மாறுதலாகி சென்னை பொன்னேரி என்ற இடத்திற்கு செல்வதாக இருந்தார். மேலும், நேற்று இரவு அவருக்கு வழி அனுப்பும் நிகழ்வும் நடைபெற இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் ஆலய வளாகத்தின் பின்புறம் உள்ள தனது அறையின் மின் விசிறி ஒன்றில் கயிறு கட்டி அதனை கழுத்தில் மாட்டி இறுகிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆரோக்கியதாஸின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலய உதவி பங்கு தந்தையின் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக ஆரோக்கியதாஸ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? வழியனுப்பு விழா நடக்கும் நேரத்தில் தற்கொலை செய்ய காரணம் என்ன? வேறு ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓராண்டாக பணிபுரிந்து வழியனுப்பு விழா நடைபெறும் நேரத்தில் ஆலயத்தில் பணிபுரிந்த உதவி பங்கு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது..
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060