Madurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்
மதுரையில் இருசக்கர வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோவுக்கு மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஷேர் ஆட்டோவில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமர்ந்து பயணம் செய்த இளைஞர் மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
மதுரை மாநகர் மேலமடை சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்றுவருவதால் மதுரை மாநகர் முதல் கருப்பாயூரணி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் அண்ணாநகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்றுவருகிறது. இந்நிலையில் மதுரை அண்ணாநகர் மகாத்மாதெரு பகுதியில் உள்ள சாலையில் 4 சாலைகள் சந்திக்கும் பகுதிகளிலும் இருந்து அடுத்தடுத்து வாகனங்கள் வருவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்துள்ளது
இது குறித்து அப்பகுதி மக்கள் வேகத்தடை அமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சியோ!! போக்குவரத்து காவல்துறையினரோ எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரை சீமான்நகர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்ற இளைஞர் ஷேர் ஆட்டோ ஒன்றில் ஆட்டோ ஓட்டுனரின் இருக்கை அருகிலயே அமர்ந்துவந்துள்ளார். அப்போது அண்ணாநகர் மகாத்மாதெரு பகுதியில் சென்றபோது திடிரென 4 சாலை சந்திப்பு பகுதியில் பைக்கில் ஒரு இளைஞர் வந்தபோது அதில் மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்ப முயன்றபோது அங்கு இருந்த மின்கம்பத்தின் அருகே சென்றபோது ஆட்டோ ஓட்டுனரின் அருகே இருந்த மீனாட்சிசுந்தரத்தின் நெஞ்சு மின்கம்பத்தில் மோதிய நொடியிலயே மயங்கினார்.
இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் அவரை மீட்டபோதே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் , மகாத்மா தெரு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




















