(Source: ECI/ABP News/ABP Majha)
Tamilnadu Exit Poll Result | மாஸ் காட்டும் திமுக! அடித்து ஆடும் I.N.D.I.A தமிழ்நாட்டில் அதிரடி
ஏபிபி, சி வோட்டர் கருத்துக்கணிப்புகளின்படி, ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 37 முதல் 39 தொகுதிகளை வென்று அதிரடி காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வந்தன. மக்களவை தேர்தல் 2024இன் 7 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், ஏபிபி, சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 1 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 46.3 சதவிகித வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என்றும் 21 சதவிகித வாக்குகளை அதிமுக கூட்டணி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18.9 சதவிகித வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 13.8 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், தேனியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வாகை சூடியது. தேனியில் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றிபெற்றார்.
கடந்த மக்களவை தேர்தலில், திமுக கூட்டணி 53.15 சதவிகித வாக்குகளும் அதிமுக கூட்டணி 30.56 சதவிகித வாக்குகளும் பெற்றன. இந்த முறையும் தமிழ்நாட்டில் திமுகவிற்கு சாதகமான நிலையே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.