CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: இந்திய சாலைகளுக்கு சிஎன்ஜி மற்றும் மின்சார கார்களில் எது சிறந்தது? ஏன்? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

CNG vs Electric Car: இந்திய சாலைகளுக்கு சிஎன்ஜி மற்றும் மின்சார கார்களில் எது சிறந்தது? ஏன்? என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சிஎன்ஜி Vs மின்சார கார்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எரிபொருளின் விலை உயர்வு என்பது, கார் வாங்குபவர்களுக்கு மலிவான, தூய்மையான மற்றும் ஸ்மார்டான ஆப்ஷன்களை வழங்குகிறது. அவற்றில் தற்போது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக சிஎன்ஜி மற்றும் மின்சார கார்கள் திகழ்கின்றன. இரண்டுமே எரிபொருள் செலவில் மிகவும் தீவிரமான சேமிப்பிற்கு வழிவகுக்கின்றன மற்றும் பெட்ரோல் & டீசலை காட்டிலும் சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்ததாக திகழ்கின்றன. ஆனா, இந்த இரண்டில் எது சிறந்தது என்பதே தற்போதைய கேள்வி? மின்சார மற்றும் சிஎன்ஜி கார்களில் எது சிறந்தது என்பது எளிய காரணங்களை கொண்டு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சிஎன்ஜி Vs மின்சார கார்: எரிபொருள் விலை & அணுகல்
சிஎன்ஜி கார்கள் அவற்றின் மலிவான எரிபொருள் செலவுக்காக மிகவும் பிரபலமானவையாகும். இதன் விலை கிலோவிற்கு சராசரியாக 75 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பெரும்பாலான வாகனங்கள் ஒரு கிலோவிற்கு சுமார் 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்குகிறது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டிற்கு இது மிகவும் ஏற்றதாக உள்ளது. அதையொட்டி நகர்ப்புறங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அணுகல் எளிதானதாக இருந்தாலும், பெட்ரோல் பம்புகளை விட இதன் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
அதேநேரம், மின்சார வாகனங்கள் மிகவும் மலிவான செலவில் இயங்குகின்றன. வீட்டிலேயே சார்ஜ் செய்யும்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 முதல் ரூ.1.5 வரை மட்டுமே செலவாகிறது. பொது நிலையங்களில் சார்ஜ் செய்தால் கூடுதல் செலவாகும். ஆனால், அனைத்து நகர பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் நிலையங்கள் இருப்பதில்லை. வீட்டிலேயே சார்ஜர் வைத்திருப்பவர்கள், நீண்ட காலத்திற்கு அதிக சேமிப்பை பெறமுடியும்.
சிஎன்ஜி Vs மின்சார கார் - கொள்முதல் விலை:
வாங்குவதற்கும் சிஎன்ஜி கார்களின் விலை மலிவானதே ஆகும். மாருதி வேகன் ஆர், டாடா டியாகோ மற்றும் ஹுண்டாய் ஆரா ஆகிய கார்களின் சிஎன்ஜி எடிஷனின் விலை ரூ.7 முதல் ரூ.10 லட்சம் மட்டுமே ஆகும். மற்ற பெரும்பாலான சிஎன்ஜி கார்களின் மாடல் சராசரியாகவே ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாகவே உள்ளது. சிறிய பட்ஜெட்டில் காரை சொந்தமாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிஎன்ஜி கார்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.
மின்சார கார்களின் விலை மிகவும் அதிகமானதாக இருந்தாலும், மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. டாடா டியாகோ மற்றும் எம்ஜி கொமெட் ஆகிய கார்கள் ரூ.7 முதல் ரூ.8 லட்சத்தில் கிடைக்கிறது. மற்ற பெரும்பாலான மின்சார கார்களின் விலை சராசரியாகவே ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாகவே உள்ளது. ஆனாலும், மின்சார கார்களில் தொழில்நுட்ப வசதிகள் அதிகளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிஎன்ஜி Vs மின்சார கார் - செயல்பாடு & வசதி
CNG கார்கள் பொதுவாக தங்களது பெட்ரோல் எடிஷன்களை விட சிறந்தவையாகவே உள்ளன. அதிவேகமான நெடுஞ்சாலை பயணங்களை காட்டிலும் நகர பயன்பாட்டிற்கு சிறப்பாக உதவுகின்றன. அதேநேரம், CNG சிலிண்டர் சிறிது பூட் ஸ்பேஸை எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
மின்சார கார்கள் மிகவும் நேர்த்தியான ஓட்டும் திறனைக் கொண்டுள்ளன, அதிக சத்தமின்றி இயக்க முடிகிறது. ஸ்டார்ட் செய்ததுமே அதிக முறுக்குவிசையை வழங்கும் திறனையும் கொண்டுள்ளது. மின்சார வாகனத்தை ஓட்டுவது குறிப்பாக போக்குவரத்தில் மிகவும் பிரீமியமான உணர்வை தருகிறது. பெரும்பாலான மின்சார வாகனங்களில் தானியங்கி டிரான்ஸ்மிஷன் உள்ளது, இது வாகனத்தை கையாள்வதை மிகவும் எளிதானதாக மாற்றுகிறது.
சிஎன்ஜி Vs மின்சார கார் - சுற்றுச்சூழல் & பராமரிப்பு
சிஎன்ஜி மற்றும் மின்சார கார்கள் ஆகிய இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவையாகும். சிஎன்ஜி கார்கள் மிகவும் குறைந்த அளவிலான கார்பன் - டை - ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன. அதேநேரம், மின்சார வாகனங்கள் டெயில் பைப் வாயிலாக எந்த உமிழ்வையும் வெளியேற்றுவதில்லை. இதுபோக மின்சார வாகனங்களில் மிகவும் குறைவான நகரும் பாகங்கள் உள்ளன. இதன் மூலம் அதன் பராமரிப்பு செலவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
சிஎன்ஜி Vs மின்சார கார் - எது பெஸ்ட்?
நகர்ப்புறங்களில் பயன்படுத்துவதற்கு குறைந்த பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளை கருத்தில் கொண்டால், உங்களுக்கு CNG கார் சிறந்த தேர்வாக இருப்பதோடு நடைமுறைக்கும் பொருந்தும். ஆனால் நல்ல செயல்திறன் மற்றும் நீண்ட கால சேமிப்புடன் கூடிய சுத்தமான ஆற்றலை கொண்ட வாகனத்தை கருத்தில் கொண்டால், குறிப்பாக நீங்கள் வீட்டிலேயே சார்ஜ் செய்ய முடியும் என்றால், தற்போதைய சூழலில் மின்சார வாகனம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காரணிகளை கருத்தில் கொண்டு உங்கள் வாழ்க்கை முறை மற்றும் பட்ஜெட்டுக்கு மிகவும் பொருத்தமான கனவு காரை தேர்வு செய்யுங்கள்.





















