பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி தாருகாவனத்தில் நடைபெற்ற 54 அடி உயர சிவன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, வழுவூர் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பெருஞ்சேரி கிராமத்தில், புராணப் பெருமைமிக்க தாருகாவனத்தில் புதிதாக கட்டப்பட்ட 54 அடி உயர சிவன் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் பக்தர்கள் திரண்டு வந்து சிவபெருமானை தரிசனம் செய்தனர். மேலும் 'ஓம் நமச்சிவாய' மந்திரம் முழங்க பக்தர்கள் வழிபட்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

தாருகாவனம் - தொன்மையான வரலாறு
பெருஞ்சேரி கிராமம் புராண காலத்தில் 'தாருகாவனம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த புண்ணிய பூமியில் சுமார் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்ததாக ஐதீகம். இவர்கள் தங்கள் தவ வலிமையால் ஆணவம் கொண்டிருந்ததாகவும், அவர்களின் செருக்கை அடக்க சிவபெருமானும் விஷ்ணுவும் இணைந்து திருவிளையாடல் புரிந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த திருவிளையாடலின் ஒரு பகுதியாக, தாருகாவனத்து முனிவர்கள் யாகம் மூலம் பல்வேறு மிருகங்களை தோற்றுவித்து சிவபெருமான் மீது ஏவினர்.

தாருகாவனத்து சித்தர் பீடம்
இதில் முக்கியமாக யானையை ஏவியபோது, சிவபெருமான் அந்த யானையை உரித்து தனது ஆடையாக அணிந்து நடனமாடினார். அந்த இடம் 'அஷ்ட வீரட்ட தளங்களில்' ஒன்றான வழுவூர் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்கதும், ஆன்மீகப் பின்னணி கொண்டதுமான தாருகாவனத்தில், தற்போது நவீன சிற்பக்கலையுடன் கூடிய 54 அடி உயர சிவன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயம் 'தாருகாவனத்து சித்தர் பீடம்' என்று அழைக்கப்படுகிறது.
பூர்வாங்க பூஜைகள்
இந்த புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தின் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே களைகட்டியிருந்தன. விழாவின் ஒரு பகுதியாக, கடந்த 4-ம் தேதி காவிரி ஆற்றின் கிளை நதியான வீரசோழன் ஆற்றில் இருந்து புனித நீர் யானைகள் மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. யானைகள் மீது அமர்ந்து வந்த கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு, மேள தாள மங்கள வாத்தியங்கள், பக்திப் பாடல்கள் முழங்க ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. பின்னர், யாகசாலையில் வைத்து சிறப்பு ஹோமங்களும், புனித வேள்விகளும் தொடங்கப்பட்டன. வேத விற்பன்னர்கள் பங்கேற்று மந்திரங்கள் ஓத, ஹோமங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இன்று குடமுழுக்கு
கும்பாபிஷேக தினமான இன்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மங்கள வாத்தியங்களும், சிவ வாத்தியங்களும் விண்ணதிர முழங்க, புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக 54 அடி உயர சிவன் வடிவ ஆலயத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓத, புனித நீர் ஆலயத்தின் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வானில் வண்ண மலர்கள் தூவப்பட்டு, சிவபெருமானுக்கு மகா அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய' கோஷங்களை எழுப்பி பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.

மூலவருக்கு மகா அபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஆலயத்தின் மூலவரான ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கத் திருமேணிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த தெய்வீகக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண் குளிர கண்டுகளித்தனர்.

வெளிநாட்டவர் வழிபாடு
இந்த கும்பாபிஷேக நிகழ்வில், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆன்மீக நாட்டம் கொண்ட அயல்நாட்டு பக்தர்கள், இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியான இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்று, சிவபெருமானின் அருளைப் பெற்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இறைவனை தரிசித்துச் சென்றனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.






















