”திமுக சூழ்ச்சியில் ராமதாஸ்!விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்?”பகீர் கிளப்பும் அன்புமணி!
திமுக தான் பாமகவுக்கு எதிரி எனக் கூறியுள்ள அன்புமணி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் வர என்னக் காரணம்? அவரை தீய சக்தி ஒன்று இயக்கிக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பாமகவின் உட்கட்சி மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் ராமதாஸ் அணியினர் மற்றும் அன்புமணி அணியினர் என இரு தரப்பினராக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய அன்புமணி ஐந்து ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை. அய்யா அய்யாவாக இருந்தால் எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். யாரும் பாமக நிறுவனர் ராமதாசை விமர்சனம் செய்யக்கூடாது என தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். அவருக்கு பிறகுதான் நான் தலைவராக வேண்டுமென நான் அப்போதே முடிவெடுத்து விட்டேன். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமதாஸ் அவராகவே இல்லை. ஒரு மகனாகவும், மருத்துவராகவும் சொல்கிறேன் அவர் இப்போது குழந்தை போல் இருக்கிறார் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுய லாபத்திற்காக, அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். அது தெரிந்த பிறகு தான் நான் தலைவராவதற்கு ஒப்புக்கொண்டேன். யாரும் சமூக ஊடகங்களில் ராமதாசை விமர்சனம் செய்யக்கூடாது என ஊடகப் பேரவை நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கட்டளையிட்டார்.
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை பேசியபோது மூன்று முறை ராமதாஸிடம் பேசினேன். அப்போதெல்லாம் பாஜகவுடன் கூட்டணி பேசு என்று தான் கூறினார். அதன் பிறகு திடீரென சிவி சண்முகத்துடன் சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகும் அது குறித்து அவரிடம் கேட்டேன். பத்திரிக்கை வைக்க வந்ததாகவே கூறினார். சி.வி. சண்முகத்துடன் அப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கு காரணம் அங்கிருந்த விஷ கிருமிகள் தான் காரணம். அதிமுகவுடன் கூட்டணி பேசு என்று கூறினாலும் பேசி இருப்பேன். பாஜக விடும் கூட்டணி குறித்து மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை நடந்தது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக தான் முதல் எதிரி, மருத்துவர் ராமதாஸ் குழந்தை மாதிரி. அவரை தீய சக்தி ஒன்று இயக்கிக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி தவறாக போடக்கூடாது என ஊடகப் பேரவினருக்கு கட்டளை என தெரிவித்தார். செல்வப்பெருந்தகை மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் திடீரென ராமதாஸ் மீது ஏன் பாசம் என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறுபதாவது திருமண நாள் விழாவின்போது தொலைபேசியில் கூற நான் பேசவில்லை என ராமதாஸ் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அம்மாவிடம் திருமண நாள் அன்று பேசினேன். தொடர்ந்து அம்மாவிடம் வர முடியாத சூழல் குறித்து எடுத்துக் கூறினேன். அப்போது அம்மா எனக்கு ஆறுதல் கூறினார்கள். நான் தொலைபேசியில் கூட பேசவில்லை என்று கூறுவது உண்மை இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.




















