IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி 58 ஆண்டுகளில் முதல்முறை வெற்றி பெற்று புதிய வரலாறை படைத்துள்ளது. இந்த இளம் இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணிக்கு மறக்கவே முடியாத வெற்றியாக மாறியுள்ளது.
அசத்தல் வெற்றி பெற்ற இந்தியா:
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 1967ம் ஆண்டு முதல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது. அங்கு இதற்கு முன்பு ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இந்திய அணி, அந்த சோகத்திற்கு நேற்று முடிவு கட்டியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்தது, 58 வருட சோகத்திற்கு முடிவு, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வென்ற முதல் ஆசிய அணி என்ற பல பெருமைகளை நேற்று இந்திய அணி படைத்தது.
ஸ்டோக்சிற்கு நெத்தியடி:
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் இல்லாத நிலையில் இந்திய அணி என்ன செய்யப்போகிறது? என்று பலரும் கவலைப்பட்டனர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோலி இல்லாத இந்திய அணியுடன் விளையாடுவது அசிங்கமாக உள்ளது என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த இளம் இந்திய அணியினர் பென் ஸ்டோக்சின் இங்கிலாந்து அணியை அசிங்கப்படுத்தி அவருக்கு பதிலடி அளித்துள்ளனர். மேலும், அடுத்த தலைமுறைக்கான இந்திய டெஸ்ட் அணியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியுடன் ஒப்பிடும்போது கிராவ்லி, டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் என இங்கிலாந்து வீரர்கள் பெரும்பாலானோர் இந்திய அணி வீரர்களை காட்டிலும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இந்த தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சுப்மன்கில் ஹெடிங்லேவில் அருமையான இன்னிங்ஸ் ஆடினார். ஆனால், அந்த ஆட்டத்தை இங்கு இரண்டு இன்னிங்சிலும் ஆடினார். உங்கள் எதிரணிக்கு பாராட்டுகளை கொடுத்தே தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இளம் இந்தியா:
இந்திய அணியில் எட்ஜ்பாஸ்டன் கே.எல்.ராகுல், ஜடேஜா, சிராஜ், ரிஷப்பண்ட் தவிர மற்ற வீரர்கள் தவிர அனைவரும் இளம் வீரர்கள் ஆவார்கள். ஆனால், இந்த இளம் படையினர் இங்கிலாந்து அணிக்கு அவர்களது சொந்த மைதானத்தில், ஆசிய அணி இதுவரை வெற்றியே பெற்றதில்லை என்ற பல சோகத்திற்கு முடிவு செய்துள்ளார்.
இந்திய அணியை ஏளனமாக பார்த்த இங்கிலாந்து அணியினர் இதன்பின்பு, அடுத்து வரும் 3 டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள் என்றே கருதப்படுகிறது. மேலும், இந்திய அணியின் எதிர்கால பந்துவீச்சுக்கு பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகிய 3 அருமையான வேகப்பந்து வீச்சு பட்டறை உருவாகியுள்ளது.
மேலும், இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆடிய 4வது வரிசையில் வீரராகவும், ஒரு கேப்டனாகவும் சுப்மன்கில் அபாரமாக ஆடியுள்ளார். எதிர்கால இந்திய அணிக்கு அவர்தான் இனி கேப்டன் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.




















