Coolie : கூலி கதையை லீக் செய்த ஆமிர் கான் மற்றும் நாகர்ஜூனா..வாயவச்சுட்டு சும்மா இருக்க சொல்லும் ஃபேன்ஸ்
Coolie : கூலி படத்தின் கதையை நிகழ்ச்சிகளில் பேச வேண்டாம் என ரசிகர்கள் நாகர்ஜூனா மற்றும் ஆமிர் கானுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்

கூலி பட கதையை உளறிய நாகர்ஜூனா மற்றும் ஆமிர் கான்
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இப்படத்திற்கு தமிழ் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் எதிர்பார்ப்புகள் உச்சகட்டத்தில் இருந்து வருகின்றன. நாகர்ஜூனா , கன்னட நடிகர் உபேந்திரா , ஆமிர் கான் , என மூன்று மொழிகளின் சூப்பர்ஸ்டார்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து சத்யராஜ் , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்கள்
வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மெகா ரிலீஸூக்கு தயாராகி வருகிறது கூலி. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. ரஜினியைத் தொடர்ந்து இந்த படத்தில் நாகர்ஜூனா மற்றும் ஆமிர் கானின் கதாபாத்திரம் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.கூலி படத்தைப் பற்றி நடிகர் நாகர்ஜூனா மற்றும் ஆமிர் கான் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிறைய தகவல்களை வழங்கி வருகிறார்கள்.
கூலி பற்றி நாகர்ஜூனா
கூலி படத்தைப் பற்றி சமீபத்தில் நாகர்ஜூனா பேசியுள்ளார் . இதில் அவர் " கூலி படம் நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களை விட புதுமையான ஒரு அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் முக்கிய வில்லன் நான் தான் என்பதால் ரஜினிக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருந்தன. எனக்கு ரஜினிக்கு இடையில் தான் கதையே நகரும் . " என படத்தில் தான் மெயின் வில்லன் என்கிற தகவலை பகிர்ந்துகொண்டார்.
கூலி பற்றி ஆமிர் கான்
அதேபோல் சமீபத்தில் கூலி படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரத்தில் பெயர் வெளியிடப்பட்டது. தாஹா என்கிற கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் பற்றி அவர் சமீபத்தில் பேசினார். " இப்படத்தில் எந்னுடய காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறும். ஆனால் ரஜினிக்கும் எனக்கும் சேர்ந்து காட்சிகள் இல்லை" என ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.
கடுப்பான ரசிகர்கள்
நாகர்ஜூனா , ஆமிர் கான் இருவரும் மாற்றி மாற்றி படத்தின் கதையில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை வெளியே சொல்லி வருகிறார்கள். இதனால் கடுப்பான ரசிகர்கள் 'படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவர்கள் மொத்த கதையையும் சொல்லிவிடுவார்கள் போலயே' என புலம்பி வருகிறார்கள்.






















