Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளை பின்பற்றும் நாடுகள் மீது, கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Trump BRICS: அமெரிக்காவின் சரிநிகர் வரிமுறைக்கு பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை:
இந்தியா உள்ளிட்ட 11 நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளுடன், தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிப்பேன் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கூடுதல் வரி விதிப்பு கொள்கைக்கு விதிவிலக்குகள் இருக்காது” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நாடுகளுடன் வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து வரும் சூழலிலும், வெளியாகியுள்ள இந்த எச்சரிக்கை சர்வதேச வர்த்தகத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
பறக்க தயாராகும் கடிதங்கள்:
பல்வேறு நாடுகளுக்கு புதிய வரி விகிதம் தொடர்பாக இந்த வாரம் கடிதம் அனுப்ப தயாராகி வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அவர்கள் வசூலிக்கும் அளவிற்கு சரிநிகர் வரி விதிக்கப்படும் என்ற ட்ரம்பின் அறிவிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இது வரும் புதன்கிழமையுடன் முடிவடைய உள்ள சூழலில், புதிய வரி தொடர்பான கடிதங்கள், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் முதல் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பு சொன்னது என்ன?
பிரேசில், சீனா, தென்னாப்ரிக்கா, இந்தியா உள்ளிட்ட 11 நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின், மாநாடு ஞாயிறன்று ரியோடி ஜெனிரோவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முடிவில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும், காசாவிலிருந்து தங்களது படைகளை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திரும்பப் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதுபோக, “உலகளாவிய வர்த்தகத்தை மேலும் குறைக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கவும், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நிச்சயமற்ற தன்மையை அறிமுகப்படுத்தவும், கண்மூடித்தனமான வரி உயர்வு நடவடிக்கைகள் வழிவகுப்பதாகவும்” பிரிக்ஸ் அமைப்பின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்து.
ட்ரம்பின் கோவத்திற்கு காரணம் என்ன?
அமெரிக்காவிற்கு எதிரான கொள்கை என எதை ட்ரம்ப் கருதினார் என்பது குறித்தோ, கூடுதல் 10 சதவிகித வரி விதிப்பு என்பது எப்போது விதிக்கப்படும் என்றோ தனது பதிவில் எந்த விளக்கத்தையும் அவர் வழங்கவில்லை. முன்னதாக பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையேயான வணிகத்திற்கு டாலர் பயன்பாட்டை தவிர்த்தால், 100 சதவிகிதம் வரி விதிப்பேன் என்றும் ட்ரம்ப் மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் தலைவர்கள் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான எல்லை தாண்டிய கட்டண முறை குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர ஞாயிறன்று நடந்த மாநாட்டில் ஒப்புக்கொண்டனர். இந்த விவகாரத்தில் முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுகுறித்து விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.





















