Chennai rain : நாங்க ரெடி! நீங்க ரெடியா? புரட்டி போடப்போகும் மழை! சென்னை மாநகராட்சி அட்வைஸ்
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் மக்களுக்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தொடர்ந்து வலுபெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலைகொள்ளக் கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக ரிப்பன் மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதியும் நேரிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார். மழை நேரத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அதேபோல் மக்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
மழை பாதிப்பு குறித்து தெரிவிப்பதற்கு 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேபோல் 9445551913 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ள நிலையில், செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற முக்கியமான எலக்ட்ரானிக் பொருட்களை சரஜ் செய்து கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.