IPL 2025 KKR vs SRH: நடப்பு சாம்பியன் கொல்கத்தா படுதோல்வி.. பிரம்மாண்ட வெற்றியுடன் பொட்டிய கட்டிய ஹைதரபாத்..
சன்ரைசர்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று டெல்லியில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத்தும் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிய நிலையில் இந்த போட்டியின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இரு அணிகளும் இயல்பாகவே ஆடினார்கள்.
279 ரன்கள் டார்கெட்:
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மிரட்டலான தொடக்கம் தர கிளாசென் 39 பந்துகளில் 7 பவுண்டரி 9 சிக்ஸருடன் 105 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருக்க சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தாவிற்கு 279 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்:
மிகப்பெரிய இலக்குடன் டி காக் - சுனில் நரைன் ஆட்டத்தை தொடங்கினர். டி காக் தடுமாற சுனில் நரைன் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாச ஓவருக்கு 10 ரன்கள் வந்தது. ஆனால், அவரை உனத்கட் அவுட்டாக்கினார். சுனில் நரைன் 16 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ரஹானே 8 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து ஓவரிலே நிதானமாக ஆடிய டி காக் 13 பந்துகளில் 9 ரன்களுடன் அவுட்டானார்.
இந்த தொடரில் பெரிதும் சோபிக்காத ரிங்கு சிங் இந்த கடைசி போட்டியிலாவது ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்த பந்திலே கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரம் ரஸல் வந்த உடனே டக் அவுட்டானார்.
உறுதியான தோல்வி:
70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தாவின் தோல்வி உறுதியானது. நிதானமாக ஆடிய ரகுவன்ஷி 14 ரன்களுக்கு அவுட்டாக, மணீஷ் பாண்டே - ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தனர். 42 பந்துகளில் 182 ரன்கள் தேவை என தோல்வி உறுதியான நிலையில் கவுரவமான இலக்கை எட்டும் வகையில் இருவரும் ஆட முயற்சித்தனர்.
ராமன்தீப்சிங் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்த நிலையில் அடுத்த பந்திலே ஹர்ஷத் அவரை போல்டாக்கினார். தோல்வியின் விகிதத்தை குறைப்பதற்காக அடுத்து வந்த ஹர்ஷித் ராணாவும் சிக்ஸராக விளாசினார்.
கடைசி கட்டத்தில் மணிஷ் பாண்டேவும் அதிரடி காட்ட கொல்கத்தா அணி 150 ரன்களை கடந்தது. இதனால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான வரலாற்றில் இருந்து கொல்கத்தா அணி தப்பியது.
110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:
கடைசியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மணீஷ் பாண்டே 23 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதே ஓவரில் வைபவ் அரோரா டக் அவுட்டானார். கடைசியாக கொல்கத்தாவிற்காக அதிரடி காட்டிய ஹர்ஷித் ராணா 21 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 34 ரன்களுடன் அவுட்டானார். இதனால், 110 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.
ஈசன் மலிங்கா, உனத்கட், ஹார்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் கடைசி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6வது இடத்துடன் முடித்துள்ளது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா 8வது இடத்தில் முடித்துள்ளது.




















