Smriti Mandhana Century: ஆஸி., மண்ணில் சம்பவம் செய்த ஸ்மிரிதி மந்தனா...! டெஸ்ட் சதம் அடித்து இந்தியா பெஸ்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிரி மந்தனா சதமடித்து அசத்தியுள்ளார்.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் திட்டமிட்டன.
இதன்படி, இரு அணிகளுக்குமான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய மகளிர் அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியே முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தையே தொடங்கியிருந்தது. இந்திய அணியின் இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 64 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்திருந்தார். இதையடுத்து, இரண்டாவது நாளான இன்று இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவும், பூனம் ராவத்தும் ஆட்டத்தை தொடங்கினர்.
Historic moment in Indian Women's cricket - Smriti Mandhana becomes first Indian Women to score a Test hundred in Australian soil.pic.twitter.com/HkJxFYTUHO
— Johns. (@CricCrazyJohns) October 1, 2021
வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்மிரிதி :
ஆட்டம் தொடங்கியது முதல் நிதானமாகவும், அதே நேரத்தில் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களை சேர்த்த ஸ்மிரிதி மந்தனா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். மேலும், இந்திய மகளிர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலவாது சதத்தை பதிவு செய்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச்சாதனையையும் படைத்தார். ஆனால், சதமடித்த சிறிது நிலையில், கார்டனர் பந்துவீச்சில் தஹிலா மெக்ராத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 216 பந்துகளில் 22 பவுண்டரி 1 சிக்ஸருடன் 127 ரன்கள் குவித்து வெளியேறினார்.
மிதாலி ராஜூடன் சிறப்பாக ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வந்த பூனம் ராவத் 165 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. இந்திய விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லென்னிங் 8 பந்துவீச்சாளர்களை இதுவரை பயன்படுத்தியுள்ளார். சதமடித்த இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவிற்கு இந்திய ரசிகர்கள் டுவிட்டரிலும், முகநூலிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
25 வயதான ஸ்மிரிதி மந்தனா இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால், அவற்றில் ஒரு சதம் மட்டும் மூன்று அரைசதம் அடித்துள்ளார். 62 ஒருநாள் போட்டியில் ஆடி 2 ஆயிரத்து 377 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 4 சதங்களும், 19 அரைசதங்களும் அடங்கும். மேலும், 81 டி20 போட்டிகளில் ஆடி 1,901 ரன்களையும் குவித்துள்ளார். அவற்றில் 13 அரைசதங்கள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Smiriti Mandana Pics: "குயின் ஆப் ஸ்மைல்" ஸ்மிரிதி மந்தனாவின் ஸ்பெஷல் க்யூட் க்ளிக்ஸ்....!