CSK Vs RCB: 127 தான் டார்கெட், மண்ணை கவ்விய சிஎஸ்கே - சேப்பாக்கத்தில் ஆர்சிபி பயங்கரம் - நியாபகம் இருக்கா?
CSK VS RCB IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் வீழ்த்தி, பெங்களூரு அணி தனது 17 ஆண்டு கால ஏக்கத்தை தீர்த்துள்ளது.

CSK VS RCB IPL 2025: கடந்த 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிஙஸ் அணி வெறும் 127 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல், ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவை அதன் கோட்டையிலேயே வீழ்த்திய ஆர்சிபி:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான, லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்களை குவித்தது. சேப்பாக்கம் மைதானத்தின் சூழலுக்கு இது மிகப்பெரிய இலக்கு என்பதால், சிஎஸ்கே வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முயன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் விளைவாக பெங்களூரு அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ளது.
ஆர்சிபியின் 17 வருட ஏக்கம்:
போட்டி தொடங்குவதற்கு முன்பாக இதில் நிச்சயம் சென்னை அணி தான் வெற்றி பெறும் என பல்வேறு கணிப்புகள் இருந்தன. காரணம், 2008ம் ஆண்டிற்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறை கூட சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதே கிடையாது.நேற்றைய போட்டிக்கு முன்பு வரை அங்கு நடைபெற்று இருந்த 9 போட்டிகளில் 8 முறை சென்னை அணி தான் வெற்றி பெற்றுள்ளது. 16 ஆண்டுகளாக சென்னை மைதானத்தில் பெங்களூரு கண்டு வந்த தோல்வி,நேற்றைய வெற்றியால் முடிவுக்கு வந்தது. கோலியின் தலைமையில் சாதிக்க முடியாததை, இளம் கேப்டன் படிதார் தலைமையில் ஆர்சிபி அணி சாதித்துள்ளது.
2008 நியாபகம் இருக்கா?
இந்த நேரத்தில் தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய முதல் போட்டியின் ஸ்கோர் கார்ட் வைரலாகி வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 126 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக அப்போதைய கேப்டன் ட்ராவிட், 47 ரன்களை குவித்தார். அதோடு, கோலி வெறும் 10 ரன்களை மட்டுமே சேர்த்து இருந்தார். இந்த எளிய இலக்கை சென்னை அணி எட்டிவிடும் என்றே பலரும் கணித்தனர்.
மண்ணை கவ்விய சென்னை:
இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு பார்திவ் படேல் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அமைத்தனர்.அவர்கள் முறையே 24 மற்றும் 45 ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவை தவிர, மற்ற அனைவருமே ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே சேர்த்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அபாரமாக பந்துவீசிய கும்ப்ளே, 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஃபீல்டிங்கில் 2 கேட்சுகளையும் பிடித்தார். 2008ம் ஆண்டு துல்லியமான பந்துவீச்சால் வெற்றியை ஈட்டிய பெங்களூரு, இந்த முறை அட்டகாசமான பேட்டிங்கால் வெற்றியை வசப்படுத்தியுள்ளது.




















