Watch Video: மிரட்டும் ட்ரம்ப்.. மாஸ் காட்டிய ஈரான்.. பூமிக்கடியில் பிரமாண்ட ஏவுகணை நகரம்.. வீடியோ பாருங்க...
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் அரசை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டிவரும் நிலையில், தங்கள் ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில், பூமிக்கடியிலுள்ள மிரட்டலான ஏவுகணை நகர வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதிய அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பேச வருமாறும், அவ்வாறு வராவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரானை மிரட்டி வரும் நிலையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என காட்டும் வகையில், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஏவுகணை நகரத்தின் வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
ஈரானை மிரட்டிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
கடந்த 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. அதில், சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக, அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், 2018-ல் அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில், ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். பின்னர், தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தை கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, சமீபத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனேனிக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியிருந்தார். அதில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு விரைவில் ஒப்புக்கொள்ளாவிட்டால், வேறு விதமாக அதை முடிக்க வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அது மட்டுமல்லாமல், ஈரானுக்கு 2 மாதங்கள் கெடுவும் விதித்திருந்தார்.
ட்ரம்ப்புக்கு கட்டுப்பட ஈரான் மறுப்பு
ட்ரம்ப்பின் கடிதத்திற்கு பதிலளித்த ஈரான் அதிபர் மசூத், அமெரிக்கா உத்தரவுகள் வழங்குவதையும், அச்சுறுத்தல்கள் விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார். நான் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் உறுதியாக உள்ளது தெளிவாகிறது.
பூமிக்கடியில் ஏவுகணை நகரம் - வீடியோ வெளியிட்ட ஈரான்
இந்த நிலையில், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், ஆயிரக்கணக்கான நவீன ஏவுகணைகளை, ஈரான் நாட்டு ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டள்ளது. தங்கள் நாட்டு ராணுவ பலத்தை காட்டும் விதமாக, 85 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், உயர் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹொசைன் பகேரி மற்றும் IRGC விண்வெளிப் படைத் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதே, ஜீப்பில் சென்று அந்த சுரங்கத்தை சுற்றிப் பார்க்கின்றனர். அப்போது, பல்வேறு நவீன ரக ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
🇮🇷 🎥 Iran, the world’s missile powerhouse, unveils its underground missile city-a vast facility storing thousands of ballistic & hypersonic missiles, including Kheibarshekan, Haj Qasem, Qadr H, Emad & Paveh.
— Haidar Al-Karrar (@HaidarAkarar) March 26, 2025
A blow to Western claims of crippling Iran’s missile power! #IRGC pic.twitter.com/DK5ix00Fd3
இதுபோன்று, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை நாங்கள் அறிமுகப்படுத்தத் தொடங்கினால், அடுத்த 2 ஆண்டுகள் போதாது என்றும் ஈரான் கூறியுள்ளது. அத்தனை ஏவுகணை நகரங்களை ஈரான் உருவாக்கி வைத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது. இந்த வீடியோ, ஈரானின் எதிரிகளாக கருதப்படும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

