EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK
எங்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும், அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என அமித்ஷாவின் எந்த கோரிக்கைக்கும் இபிஎஸ் வளைந்து கொடுக்க முடியாது என விடாப்பிடியாக இருப்பதாக சொல்கின்றனர். அதுவும் ஓபிஎஸ், டிடிவியை கூட்டணி ஆட்சியில் சேர்க்கவே முடியாது என கறார் காட்டி வருகிறாராம் இபிஎஸ்.
அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நடுவே அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது களத்தை பரபரப்பாக்கியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் நான் தான், ஓபிஎஸ், டிடிவியுடன் ஒன்றுசேர மாட்டோம் என சில கண்டிஷன்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக சொல்கின்றனர்.
இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடக்கும் சமயத்தில் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என பதிவிட்டது கவனிக்க வேண்டியது. கூட்டணி அரசு என்று வரும் போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற விசிக தலைவர் திருமாவளவன் பாணியை கையில் எடுத்துள்ளது பாஜக.
அமைச்சரவையில் முக்கிய துறைகள் வேண்டும், குறிப்பாக அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையும் பாஜக தரப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் வளைந்து கொடுக்க இபிஎஸ் தயாராக இல்லை என்று சொல்கின்றனர். 2021 தேர்தலின் போது பாஜக 20 இடங்களை கேட்ட போதும் 20 இடங்களுக்கு மட்டுமே ஓகே சொன்னார் இபிஎஸ். அப்போதே அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியும் அதையெல்லாம் இபிஎஸ் கண்டுகொள்ளாமல் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சிதறிய அதிமுகவை மீண்டும் ஒன்றிணைத்ததில் பாஜகவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. அப்போது கூட 2019 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 5 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியது.
என்ன நடந்தாலும் சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள இபிஎஸ் எப்போதுமே தயாராக இருந்ததில்லை என்ற கருத்து இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இந்த முறை கூட்டணிக்காக இறங்கி வந்தாலும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பாஜக வைக்கும் நிபந்தனைகளுக்குள் வரமுடியாது என இபிஎஸ் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
அதுவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ்-ம், டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியில் இருப்பதால் இபிஎஸ் இன்னும் அதிகம் கறாராக இருக்கிறார். ஆட்சியில் பங்கு என்று வந்தால் ஓபிஎஸ், டிடிவிக்கும் பதவி கொடுக்க வேண்டி வரும் என்பதால் ஆரம்பத்திலேயே அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு வருவதாக சொல்கின்றனர்.





















