L2: Empuraan Review : பிசிறே இல்லாத மேக்கிங், கதையில் சொதப்பல்...மோகன்லாலின் எம்புரான் விமர்சனம்
Empuraan Review in Tamil : பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

எம்புரான்
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது . நேற்று மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. பிருத்விராஜ் , மோகன்லால் , டொவினோ தாமஸ் , மஞ்சு வாரியர் , சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்
எம்புரான் விமர்சனம்
கேரள மாநில அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் அதிகாரப் போட்டிதான் லூசிஃபர் மற்றும் எம்புரான் ஆகிய இரண்டு படங்களின் மையக்கதை. அதிகாரம் மற்றும் பணத்தாசையில் அரசியல்வாதிகள் போதைப் பொருள் கடத்தல் , தீவிரவாத செயல்களுக்கு துணை இருக்கிறார்கள். கேரள அரசியல் கட்சியான IUF தலைவர் PKR மோகன்லாலை சின்ன வயதிலிருந்து எடுத்து வளர்க்கிறார். அதே நேரத்தில் மோகன்லால் குரேஷி ஏப்ரஹாம் என்கிற பிரபல மாஃபியாவாகவும் இக்கதையில் இடம்பெறுகிறார். IUF தலைவர் இறந்த பின் அடுத்த முதலமைச்சருக்கு கடும் அரசியல் சூழ்ச்சி நடக்கிறது. இறுதியில் PKR இன் கடைசி மகன் ஜதின் ராம்தாஸை முதலமைச்சராக வெற்றிபெற வைத்துவிட்டு மோகன்லால் தலைமறைவாவது முதல் பாகத்தின் கதை.
ஆட்சியில் அமர்ந்த ஜதின் ராம்தாஸ் மற்ற்வர்களின் நம்பிக்கைக்கு எதிராக தீவிர மதவாத கட்சியுடன் கைக்கோர்க்கிறான் . மறுபக்கம் சர்வதேச அளவில் போதைப் பொருட்களை கடத்துபவர்களை மாஸாக தடுத்து நிறுத்துகிறார் மோகன்லால். மறுபடியும் சிக்கலில் இருந்து தனது சொந்த ஊரை காப்பாற்ற குரேஷி ஏப்ரஜாம் வருவதே எம்புரான் படத்தின் கதை. குரேஷி ஏப்ரஹாமின் சீடனாக வரும் பிருத்விராஜ் பற்றிய ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் வைத்து அவரையும் இந்த கதையின் ஓட்டத்தொட்டு தொடர்புபடுத்தி இருக்கிறார்கள்.
அரசியல் , அதற்காக நடக்கும் அதிகாரப் போட்டி, அரசியல்வாதிகளை பயண்படுத்து சர்வதேச தீவிரவாத கும்பல் என உலகம் முழுவதும் அரசு செயல்படும் விதத்தைப் பற்றி பேசியது லூசிஃபர் முதல் பாகம். ஆனால் இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கி கிட்டதட்ட 50 நிமிடங்கள் கழித்துதான் மோகன்லால் வருகிறார் என்றாலும் இரண்டாம் பாதியில் மோகன்லாலுக்கு அடுத்தடுத்து ஸ்லோ மோஷன் காட்சிகளை வைத்திருப்பது கதையின் இயல்பான போக்கை கெடுக்கிறது.
முதல் பாகத்தில் கதையில் என்னவெல்லாம் பேச வேண்டும் என்கிற தெளிவு இருந்தது போலவும் இரண்டாம் பாதியில் கதையை நகர்த்த சரியான திருப்பங்கள் இல்லாமல் போனது போல இருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் சுவாரஸ்யமே இல்லாமல் படம் செல்லும் போக்கில் நாமும் ஒட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
எம்புரான் படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்றால் அதன் தொழில்நுட்ப தேர்ச்சிதான். ஸ்டன்ட் காட்சிகளாகட்டும் , படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட லொக்கேஷன் , பயண்படுத்தப்பட்ட காஸ்டியூம் துப்பாக்கி , ப்ரோடக்ஷன்ஸ் , வி.எஃப்.எக்ஸ் என உலகத் தரமான ஒரு காட்சி அமைப்பை சாதித்து காட்டியிருக்கிறார்கள். கதை ரீதியாக இன்னும் எங்கேஜ் செய்திருந்தால் மலையாள சினிமாவில் எம்புரான் திரைப்படம் ஒரு பெரிய மைல் கல்லாக இருந்திருக்கும்

