EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJP
இபிஎஸ்-ம் எஸ்.பி.வேலுமணியும் அடுத்தடுத்து டெல்லிக்கு பறந்திருக்கிறார்கள். இபிஎஸ்-ஐ சந்திக்க அமித்ஷா அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துள்ளதாகவும், சில முக்கிய விஷயங்களுக்கு முடிவு கட்டுவதற்காக இந்த சந்திப்பு நடப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சட்டப்பேரவைக்கு வராமல் டெல்லிக்கு யாரை சந்திக்க போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது என பேரவையிலேயே வைத்து விமர்சனம் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டப்பேரவை நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், அவசர, அவசரமாக இபிஎஸ் டெல்லி சென்றிருப்பது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
டெல்லி அதிமுக அலுவலகத்தை தான் பார்வையிடப் போகிறேன் என இபிஎஸ் வெளியே சொல்லி வந்தாலும், அதிமுக- பாஜக கூட்டணி விவகாரத்தில் பாஜகவின் முக்கிய புள்ளிகளை சந்திப்பதற்காகவே கிளம்பியதாக சொல்கின்றனர். மிக முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காகவே டெல்லி பறந்துள்ளார் இபிஎஸ். அமித் ஷாவின் அப்பாயிண்மெண்ட் கிடைத்ததாலேயே எடப்பாடி பழனிசாமி அவசர, அவசரமாக டெல்லி சென்றுள்ளார் என்றும் அமித் ஷா மட்டுமில்லாமல் பாஜகவின் இன்னும் சில முக்கிய நபர்கள் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரையும் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் வைத்து சந்தித்து பேசவுள்ளதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு விமான ஏறிய சில மணி நேரங்களில் அடுத்த விமானத்தை பிடித்து டெல்லிக்கு பறந்திருக்கிறார் அதிமுகவின் கொறடாவும் தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. இபிஎஸ்-க்கு எதிராக எஸ்.பி.வேலுமணியை வைத்துதான் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது என்ற பேச்சு இருக்கிறது. இந்தநிலையில் இபிஎஸ்-ம் எஸ்.பி.வேலுமணியும் ஒரே விமானத்தில் டெல்லி கிளம்பாமல் தனித்தனியாக சென்றது ஏன் என்ற கேள்வியும் வந்துள்ளது. ஒரே விமானத்தில் செல்ல இருவருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லையா ? அல்லது வேறு காரணங்களால் இருவரும் ஒன்றாக இணைந்து பயணிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியானது. பாஜகவுடன் கூட்டணியே இல்லை என விடாப்பிடியாக இருந்த இபிஎஸ் தற்போது இறங்கி வர ஆரம்பித்துள்ளார். வேறு வழியே இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முடிவுக்கு இபிஎஸ் வந்துள்ளதாக சொல்கின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய அவரது டெல்லி பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















