CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
CA Final 3 Times a Year: இனி சிஏ இறுதித் தேர்வும் ஆண்டுக்கு 3 முறை நடைபெறும் என்று இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஏ இறுதித் தேர்வுகள் இனி ஆண்டுக்கு 3 முறை நடைபெறும் என்று ICAI எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஆண்டுக்கு 2 முறை இந்தத் தேர்வு நடந்து வந்தது.
சிறப்பான வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிக்கும் நோக்கில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு இடைநிலை மற்றும் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 3 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிஏ இறுதித் தேர்வும் ஆண்டுக்கு 3 முறை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது தேர்வு?
இதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 3 முறை இறுதித் தேர்வு நடக்க உள்ளது.
அதேபோல, Additionally, தகவல் அமைப்புகள் தணிக்கையில் (Information Systems Audit) தகுதிக்குப் பிந்தைய படிப்புக்கான மதிப்பீட்டுத் தேர்வும் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் தேர்வு நடக்கிறது. தற்போது, இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
ஆடிட்டர் ஆவது எப்படி?
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் இந்தியப் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும்.
தேர்வு முறை எப்படி?
பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், சிஏ முதல்நிலைத் தேர்வு மற்றும் இடைநிலைத் தேர்வு ஆகிய இரண்டும் ஆண்டுக்கு 3 முறை, ஜனவரி, மே/ ஜூன் மற்றும் செப்டம்பர் என நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

