IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL 2025 CSK vs RCB: சென்னை அணியை அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஆர்சிபி அணி நடப்பு சீசனின் 8வது போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணிக்காக ரஜத் படிதாரின் அபார அரைசதம், பில் சால்டின் அதிரடி, தேவ்தத் படிக்கல்லின் அதிரடி, டிம் டேவிட்டின் ஹாட்ரிக் சிக்ஸருடன் 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, 197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தனர்.
ஹேசில்வுட் - புவனேஷ்வர்:
ஆட்டத்தை தொடங்கிய சென்னை அணிக்கு ரவீந்திரா - ராகுல் திரிபாதி ஆட்டத்தை தொடங்கினார். கடந்த போட்டியில் ஆடாத புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். ஹேசில்வுட் தான் வீசிய முதல் ஓவரிலே ராகுல் திரிபாதியை 5 ரன்னில் அவுட்டாக்கினார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் கடந்த போட்டியில் அதிரடி அரைசதம் விளாசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை ஹேசில்வுட் டக் அவுட்டாக்கினார்.
8 ரன்னில் 2 விக்கெட்டை இழந்த சென்னை அணிக்காக களமிறங்கிய தீபக் ஹுடாவை 4 ரன்னில் புவனேஷ்வர் அவுட்டாக்கினார். 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், சாம் கரண் - ரவீந்திரா ஜோடி சேர்ந்தனர். பவர்ப்ளேவில் 6 ஓவர்களுக்கு 30 ரன்களை மட்டுமே சென்னை அணி ஆடியது. இதனால், கட்டாயம் அதிரடியாக ஆட வேண்டிய நிலையில் சாம் கரண் அதிரடி காட்ட முயற்சித்தார்.
யஷ் தயாள் அபாரம்:
ஆனால், அவரை லிவிங்ஸ்டன் 8 ரன்னில் அவுட்டாக்க, இம்பேக்ட் வீரராக ஷிவம் துபே களமிறங்கினார். ஷிவம் துபே வந்த பிறகே சென்னை அணிக்காக முதல் சிக்ஸர் வந்தது. 10வது ஓவரிலே சென்னை அணி முதல் சிக்ஸரை விளாசியது. ரவீந்திரா - துபே ஜோடி அதிரடி காட்ட முயற்சித்தாலும் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.
புவனேஷ்வர், ஹேசில்வுட், யஷ்தயாள், லிவிங்ஸ்டன், சுயாஷ் சர்மா கட்டுக்கோப்பாக பந்துவீசினர். குறிப்பாக, யஷ் தயாள் வீசிய 13வது ஓவரில் ஆட்டத்தை முழுவதும் சென்னைக்கு எதிராக திருப்பினர். அந்த ஓவரில் யஷ் தயாள் வீசிய முதல் பந்தில் ரவீந்திரா போல்டானார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் அதிரடி காட்டிய ஷிவம் துபேவும் அவுட்டானார். அவர் 19 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசியில் தோனி அசத்தல்:
80 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்த நிலையில், ஜடேஜா - அஸ்வின் ஜோடி சேர்ந்தனர். தோல்வியை தவிர்க்க சென்னை அணி அதிரடி காட்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சென்னை அணி ஏமாற்றமே தந்தது. இந்த ஜோடி ஓரிரு ரன்களாகவே எடுக்க அஸ்வின் லிவிங்ஸ்டனின் சுழலில் 11 ரன்களுக்கு அவுட்டாக 8வது விக்கெட்டிற்கு களமிறங்கினார்.
கடைசி 18 பந்துகளில் சென்னை வெற்றிக்கு 90 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை ரசிகர்களுக்காக ஜடேஜா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். தோனி 19வது ஓவரில் ஒரு பவுண்டரி விளாச, குருணல் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் தோனி இரண்டு இமாலய சிக்ஸர்களை விளாசினார். சென்னை ரசிகர்களுக்கு அது குஷியை ஏற்படுத்தியது.
17 வருடத்திற்கு பிறகு வெற்றி:
இருப்பினும், 20 ஓவர்களில் சென்னை 146 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூர் அணி 17 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெற்றது. தோனி 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இந்த போட்டியில் பெங்களூர் கேப்டன் படிதாரின் கேப்டன்சி பாராட்டும் விதமாக இருந்தது. கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய குருணல்பாண்ட்யா பந்துவீச்சு இந்த மைதானத்தில் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதி அவருக்கு 2 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். அதிலும் அவர் 26 ரன்களை வழங்கினார்.
ஹேசில் வுட் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யஷ் தயாள், லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணியை பெங்களூர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

