Annamalai to Delhi: டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று திரும்பிய நிலையில், தற்போது அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்துவிட்டு, நேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில், இன்று அண்ணாமலை டெல்லி சென்றிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி
நேற்று முன்தினம் இரவு, டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து, சுமார் 45 நிமிடங்கள் பேசினார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், அது குறித்துதான் அமித் ஷா இபிஎஸ்ஸிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் நேரத்தில், சூழல்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனவும், அமித் ஷாவிடம் அரசியல் தொடர்பாகவே, கூட்டணி குறித்தோ எதுவுமே பேசவில்லை எனக் கூறி நைசாக நழுவினார்.
ஆனாலும் விடாத நிருபர் ஒருவர், அப்படியானால் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா என கேள்வி எழுப்பினார். அதற்கு டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதா.? ஏன் அவசரப்படுகிறீர்கள்.. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேச முடியும் என்று கூறிச் சென்றுவிட்டார்.
பாஜக உடன் கூட்டணி கிடையாது என இதற்கு முன்னர் திட்டவட்டமாக கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, இந்த பேட்டியில், கடைசி வரை கூட்டணி இல்லை என்பதை சொல்லவே இல்லை. நிருபர்களின் கூட்டணி தொடர்பான கேள்விகளை மறுக்கவும் இல்லை. இதனால், அதிமுக-பாஜக இடையே டீல் ஓகே ஆகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
பரபரப்பான சூழலில் டெல்லி சென்ற அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று திரும்பிய பரபரப்பு அடங்குவதற்குள், இன்று அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். இது, ஏற்கனவே கூறப்படும் கூட்டணி குறித்த தகவல்களுக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது. அதிலும், டெல்லி செல்லும் அண்ணாமலை, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து தலைமையிடம் விளக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமித் ஷாவையும் இன்று அவர் சந்தித்து பேச உள்ளதாகவும், அப்போது அதிமுக உடனான கூட்டணி குறித்து அமித் ஷா பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாமலை டெல்லி சென்று திரும்பியதும், கூட்டணி குறித்த நிலைப்பாடு ஓரளவிற்கு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கூட்டணி உறுதியானால், தமிழ்நாட்டு அரசியல் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

