(Source: ECI/ABP News/ABP Majha)
கலவர பூமியாக வங்கதேசம்! முன்னாள் கேப்டன் மோர்டசா வீட்டுக்கு தீ வைப்பு - பெரும் பரபரப்பு
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆவாமி லீக் கட்சியின் எம்.பி.யுமான மோர்டசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அந்த நாட்டு பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
மோர்டசா வீட்டுக்கு தீ வைப்பு:
இதனால், வங்கதேசத்தில் தற்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் ஆளுங்கட்சியாக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆவாமி லீக் கட்சியைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில், ஆவாமி லீக் கட்சியின் முக்கிய எம்.பி.யாக பொறுப்பு வகிப்பவர் முகமது மோர்டசா. இவர் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார். இளைஞர்கள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், குல்னா மாவட்டத்தில் உள்ள மோர்டசாவின் வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்து எரித்தனர். அவரது வீடு கற்களாலும் சரமாரியாக தாக்கப்பட்டது.
Bangladesh former national captain and currently AL mp Mashrafe Mortaza's house being burned down.. pic.twitter.com/hteebrdXcJ
— Shishir 🇧🇩 (@shishir_bin) August 5, 2024
முன்னாள் வங்கதேச கேப்டன்:
இந்த தாக்குதலில் மோர்டசாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் ஏதும் பாதிப்பு ஏற்பட்டதா? என்று எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மோர்டசா நரைல் 2 தொகுதியில் இருந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வானவர். ஆவாமி லீக் கட்சியின் முக்கிய நிர்வாகியுமாகவும் அவர் உள்ளார்.
மோர்டசா அந்த அணியின் தவிர்க்க முடியாத முதன்மை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். 36 டெஸ்ட் போட்டிகளில் 78 விக்கெட்டுகளும், 220 ஒருநாள் போட்டிகளில் ஆடி 270 விக்கெட்டுகளும், 54 டி20 போட்டிகளில் ஆடி 42 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
வங்கதேச அணிக்காக நெருக்கடியான நேரத்தில் பேட்டிங் செய்தும் உள்ளார். 40 வயதான மோர்டசா 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 அரைசதங்களுடன் 797 ரன்கள் எடுத்துள்ளார். 220 ஒருநாள் போட்டிகளில் 1 அரைசதத்துடன் 1787 ரன்கள் எடுத்துள்ளார். 54 டி20 போட்டிகளில் ஆடி 377 ரன்கள் எடுத்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய மோர்டசா 2020ம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.