சர்ச்சையில் சிக்கிய நடிகர் சந்தானம்... டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடை?
திரைப்பட நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் குழுவினர் மீது சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தினை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் வலசையூரை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் அஜித் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், நடிகர் சந்தானம் நடிப்பில், நடிகர் ஆர்யா தயாரிப்பில் வெளியாக உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் என்கின்ற திரைப்படத்தில் உள்ள கோவிந்தா கோவிந்தா என்ற பாடல் இந்து மத மக்களின் புனித தளமாக கருதப்படும் திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில் மற்றும் இந்து மக்களின் வழிபாட்டு முறை, உணர்வை புண்படுத்தும் விதமாக பாடல் அமைந்துள்ளது. எனவே நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு, கிழக்கு மாவட்ட செயலாளர் அஜித் புகார் அளித்துள்ளார். இந்து மக்களின் கடவுள்களில் ஒன்றான பெருமாளையும், திருப்பதி கோவிலை அசிங்கப்படுத்தி, மத உணர்வுகளை புண்படுத்திய படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

இதுகுறித்து பாஜக வழக்கறிஞர் பிரிவு கிழக்கு மாவட்ட செயலாளர் அஜித் கூறுகையில், ”டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் பாடலில் இந்துக்களில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பாடல் வரி அமைந்துள்ளது. மேலும், கோவிந்தா என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. ஆனால் இவர்கள் பாடல் வரிகள் அனைத்தையும் தவறாக சித்தரித்து பாடலை உருவாக்கியுள்ளனர். எனவே உடனடியாக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "கிசா 47" என்ற பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும். இந்தப் பாடலை எழுதிய நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் சந்தானம் உள்ளிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.




















