உங்களை போன்று நான்.. உங்கள் கிரீடத்தில் மற்றொரு வைரம் கூலி.. ரஜினிகாந்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!
தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ.50 கோடிக்கு மேல் முன்பதிவில் சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் கூலி திரைப்படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
அதனை போற்றும் விதமாக திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், கவிப்பேரரசு வைரமுத்து, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த்திற்கு தனது சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தபோது ரஜினி போன்று பேசியும் நடித்தும் காட்டி மக்களை ரசிக்க வைத்தார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்நிலையில், தனது சமூகவலைதளத்தில் "உங்களை பார்த்து, உங்களை போன்று மிமிக்ரி செய்து, உங்களது பாதையில் பயணித்து, இப்போது நீங்கள் இருக்கும் துறையிலேயே இருப்பது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம். தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் கிரீடத்தில் மற்றுமொரு வைரமாக கூலி திரைப்படம் ஜொலிக்கும் என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூலி படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி படத்தின் க்ளிம்ப்ஸ் மேக்கிங் வீடியோ கூலி படத்தின் இடைவேளையில் ரீலிஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஒரே நாளில் இரண்டு கொண்டாட்டத்தையும் ரசிகர்கள் கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தின் ரஜினியின் இளம் வயது நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.






















