207 அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு விநோத விளக்கம் அளிப்பதா? உதயநிதி ரசிகர் அன்பில்- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் - ஈபிஎஸ்.

வெற்று விளம்பர விடியா திமுக-வின் பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:
கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுக-வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?
வயிற்றுப் பசியால் ஏழை குழந்தைகளின் படிப்பு பாழாகிவிடக்கூடாது என்பதற்காக சத்துணவு தந்த எம்ஜிஆரும்; மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த ஜெயலலிதாவு முன்னெடுத்த கல்வித் துறையை, கடந்த 51 மாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் துவங்கிவிட்டார்கள். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.
மேலும், அரசுப் பள்ளிகளின் அருகிலேயே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையால், பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதிலேயே பாதை மாறுகின்ற நிலையைப் பற்றியும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தியும், தக்க நடவடிக்கை எடுக்காத பொம்மை முதலமைச்சர், தற்போதுதான் மாணவர்களை போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என்று விளம்பரங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார்.
தனியாருக்கு தாரை வார்க்கவா?
இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வாரிசு உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது. தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த பெயிலியர் மாடல் அரசு கனகச்சிதமாக செய்து வருவதாகவும், பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 207 அரசுப் பள்ளிகளை இந்த பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு மூடியுள்ளது. 'இந்த 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால்' மூடப்பட்டு வருவதாக நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 60-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கு மடிக் கணினி, படித்த ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் என்று பல திட்டங்களை செயல்படுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தது.
தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்வதா?
ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசோ, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக் கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது.
207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விரோதமான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.























