Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
நாட்டு மக்களுக்காக இன்று பிரதமர் மோடி உரையாற்றியபோது, பாகிஸ்தான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது தற்காலிகமானதுதான் என்றும், தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கான இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, நீதியை நிலைநாட்டவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாகவும், இந்தியாவின் நடவடிக்கையில் நியாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் கெஞ்சியதாகவும், இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதுதான், இன்னும் முடிவடைந்துவிடவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்த மோடி
இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். பாதுகாப்பு படையினரின் பராக்கிரமமும் துணிச்சலும் வெற்றியை தேடித் தந்ததாகவும், ராணுவ வீரர்கள், உளவுத்துறைக்கு தலைவணங்குவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தீரமிக்க ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு வீரவணக்கத்தையும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ராணுவ பலத்தை கடந்த சில நாட்களாக காட்டி வருவதாக தெரிவித்த மோடி, இக்கட்டான நேரத்தில் நமது அமைதியையும், ஒற்றுமையையும் காண முடிந்ததாக குறிப்பிட்டார்.
ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா இது போன்ற ஒரு பதிலடியை கொடுக்கும் என பயங்கரவாதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பதிலடி தாக்குதல் நியாயமானது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசத்தையும், தேச நலனையும் முதன்மையாக கருதியே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வெற்றியும் கண்டதாக கூறினார்.
தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் அர்ப்பணிப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட இந்த பதிலடி, பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் என்பது பெயர் மட்டுமல்ல, நமது உணர்வுகள் எனவும், நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை இது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பஹல்காமில் மதத்தின் பெயரால் தீவிரவாத தாக்குதல்
பஹல்காமில் மதத்தின் பெயரால் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய மோடி, பஹல்காம் தாக்குதல் சம்பவம் தனக்கு தனிப்பட்ட முறையில் மனவலியை தந்ததாகவும் குறிப்பிட்டார். கருணை இல்லாமல் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் கொன்றதாகவும் வேதனை தெரிவித்தார் மோடி.
“பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது இந்தியா“
பயங்கரவாதிகளின் அனைத்து பயிற்சி முகாம்களையும் இந்திய ராணுவம் தகர்த்துள்ளதாக தெரிவித்த பிரதமர், பஹவல்பூர், முர்டிகோவில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் உலகளவிலான தீவிரவாதத்திற்கு பல்கலைக்கழகமாக செயல்பட்டதாக தெரிவித்தார்.
3 தசாப்தங்களாக பயங்கரவாதிகள் சுதந்திரமாக வலம் வந்ததாகவும், அவர்களை ஒரே தாக்குதலில் இந்தியா கொன்றுள்ளதாகவும், பயங்கரவாதிகளின் தலைமையகத்தையும் நாம் தரைமட்டமாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் மோடி. இந்தியாவின் தாக்குதல் தீவிரவாத முகாம்களை மட்டுமல்லாமல், அவர்களின் நம்பிக்கையையும் தகர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய ராணுவம் இப்படி ஒரு தாக்குதல் நடத்தும் என தீவிரவாதிகள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் என்றும், நம் சகோதரிகளின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளதாக கூறினார்.
“இந்தியாவின் தாக்குதலால் கதிகலங்கியுள்ள பாகிஸ்தான்“
இந்தியாவின் அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தான் கதிகலங்கியுள்ளதாகவும், தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலுக்கு ஆதரவளிக்காமல், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார் பிரதமர் மோடி.
இந்தியாவில் உள்ள பள்ளிகள், வீடுகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தானின் ட்ரோன்களும், ஏவுகணைகளும் இந்தியாவின் தாக்குதலில் வீழ்ந்ததை உலகமே பார்த்ததாகவும், அதே நேரத்தில், இந்தியாவின் ட்ரோன்களும், ஏவுகணைகளும் துல்லியத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் பெருமைமிக்க விமானப்படை தளங்கள் பெரும் சேதமடைந்ததாகவும், ராணுவ வீரர்கள், உளவுத்துறைக்கு தலைவணங்குவதாகவும் கூறினார் மோடி.
“இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்“
இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் ராணுவம் தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்திற்க அழைப்பு விடுத்ததாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தீவிரவாத தாக்குதலில் ஈடுபடமாட்டோம் என பாகிஸ்தான் கூறியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் கடுமையான நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்து போனதாகவும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள், ராணுவ தளங்கள் மீதான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், தாக்குதலுக்கு இந்தியாவின் முப்படைகள் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான கொள்கையாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இருக்கும் என்றும், அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது எனவும் பிரதமர் மோடி கூறினார். தீவிரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசும், ராணுவமும் செயல்பட்டால், ஒருநாள் அந்நாடு அழியும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுமானால், தீவிரவாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே நிகழும் எனவும், இனி இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு பயங்கரவாத செயலும் போராகவே கருதப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.






















