யோகா எனும் விஞ்ஞானமும் கலாச்சாரமும்.. மனிதகுலத்திற்கு பாரதத்தின் கொடை : சத்குரு சிறப்பு கட்டுரை
மதங்களுக்கு முன்பே யோகா தோன்றிவிட்டது. நமக்குள் பார்த்து, நம்பிக்கைகளையும் முன்முடிவுகளையும் ஓரமாக ஒதுக்கிவைத்தால் உண்மை நிச்சயமாக உதயமாகும் என்பதை இது நினைவூட்டுகிறது - சத்குரு
சத்குரு: பாரத தேசத்தில் ஒரேயொரு கலாச்சாரம் மட்டுமே வழங்கப்பட்டு வரவில்லை - பன்முகத் தன்மையான கலாச்சாரங்களின் வண்ணக் கலவை இந்த மண், இங்கே அனைவரும் ஒரேவிதமாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் நமக்கு இல்லை. மக்களின் பாரம்பரியம், மொழி, உணவு, உடை உடுத்தும் விதம், இசை, நடனம் என அனைத்துமே இந்த தேசத்தின் ஒவ்வொரு ஐம்பது அல்லது நூறு கிலோமீட்டரை கடக்கையிலும் மாறுபடுகிறது. பன்முகத் தன்மையை நாம் எந்தளவுக்கு ஊக்குவித்தோம் என்றால், 1300க்கும் மேற்பட்ட மொழிகளும் பேச்சு வழக்குகளும் இந்த தேசத்தில் இருந்ததுடன், கிட்டத்தட்ட முப்பது முழுமையான மொழிகள் எண்ணிலடங்கா இலக்கிய படைப்புகளை தன்னகத்தே கொண்டு செழித்திருந்தன.
இந்த பூமியிலேயே இத்தனை விதமான கலைகளும் கைவினை வடிவங்களையும் கொண்டுள்ள ஒரே நாடு என்றால் அது அநேகமாக நமது தேசமாக மட்டுமே இருக்கும். உலகிலுள்ள எல்லா மதங்களும் இங்கே இருப்பதுடன், பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளின் பிறப்பிடமாகவும், உலகின் மற்ற பகுதிகள் கண்டேயிராத வகையில் ஒரு தனிமனிதனின் உள்நிலை நல்வாழ்வு மற்றும் உச்சபட்ச நல்வாழ்வை பல்வேறு கோணங்களில் அணுகியதும் இந்த தேசம்தான்.
எதிர்பாராத விதமாக, கடந்த சில தலைமுறைகளில், எண்ணற்ற ஆன்மீக சாத்தியங்கள் நிறைந்த இந்த வண்ணமயமான மண்ணுடனான தங்கள் தொடர்பை பல இந்தியர்கள் இழந்து வருகிறார்கள். எனவே IGNCA முதலிய அமைப்புகள் மேற்கொண்டு வரும் செயல்கள் பாராட்டுக்குரியது, ஏனென்றால் இந்த கலாச்சாரம் தொலைந்துவிடக்கூடாது. இந்திய கலாச்சாரத்திற்கு என்று ஒரு தனி வலிமை இதன் முழுமையான உள்நிலை நல்வாழ்வை நல்கும் விஞ்ஞானத்தில் இருந்தும் தொழில்நுட்பத்தில் இருந்தும் பிறக்கிறது - இன்று மொத்த உலகமும் இதற்காக கதறிக்கொண்டு இருக்கிறது. அவர்களிடமுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் வெளிப்புற சூழ்நிலைகளில் பல அற்புதமான செயல்களை செய்திருக்கிறார்கள், ஆனால் உள்ளே போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தேசத்தில் நம்மிடமுள்ள ஞானக் கருவூலத்தை நாம் மீண்டும் திறந்து பயன்படுத்தினால் அது நமது தேசத்தின் நலனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்குமே நல்வாழ்வை நல்கும் பொக்கிஷமாக திகழும்.
சர்வதேச யோகா தினம்:
இந்த ஒரு அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மனிதகுல வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தில் இது நிகழ்ந்துள்ளது, ஏனென்றால் முன்னெப்போதையும் விடவும் இன்று யோக அறிவியல் மிக பொருத்தமானதாக, தேவையானதாக இருக்கிறது. மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்ப்பதற்கு தேவையான திறனை நாம் பெற்றுள்ளோம் - ஊட்டச்சத்து, ஆரோக்கியம், கல்வி என நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மிகச்சிறந்த கருவிகள் இன்று நாம் பயன்படுத்துவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறது - அதை பயன்படுத்தி நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த உலகை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். ஆனால் இத்தகைய ஆற்றல்மிக்க கருவிகளை பயன்படுத்துகையில் மனிதரின் உள்நிலையில் அனைவரையும் ஏற்றுக்கொண்டு அரவணைத்து செல்லும் தன்மை, சமநிலை மற்றும் பக்குவம் இல்லையென்றால் இந்த உலகம் எப்போது வேண்டுமானாலும் பேரழிவை சந்திக்க நேரிடலாம். வெளிப்புற சூழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள நாம் எடுக்கும் அயராத முயற்சிகளால் இந்த உலகையே நிர்மூலமாக்கும் நிலைக்கு நெருக்கமாக இருக்கிறோம். இன்று நம்மிடமுள்ள வசதிகளும் சௌகர்யங்களும் இதுவரை எந்த ஒரு தலைமுறையினரும் அறிந்திராதவை. ஆனால் இப்போது, மனிதகுல வரலாற்றிலேயே மிக ஆனந்தமான அல்லது அன்பான தலைமுறை என்று நம்மால் நம்மை கூறிக்கொள்ள முடியாது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்று மன அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் அவர்களது தோல்விகளால் அவதிப்படுகிறார்கள், ஆனால் பலரும் அவர்களது வெற்றியினால் விளைந்த விளைவுகளால் அவதிப்படுவதுதான் விசித்திரம். சிலர் அவர்களது வரம்புகளில் அகப்பட்டு அவதிப்படுகிறார்கள், ஆனால் பலருக்கும் அவர்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரமே பாதிப்பாகியிருக்கிறது. இங்கே காணாமல் போயிருப்பது - மனித விழிப்புணர்வு. மற்ற அனைத்தும் அதனதன் இடத்தில் இருக்கிறது, ஆனால் மனிதன் மட்டும் அவனுக்குரிய இடத்தில் இல்லை. மனிதர்கள் தங்களின் ஆனந்தத்திற்கான பாதையில் குறுக்கிடுவதை மட்டும் நிறுத்திக்கொண்டால் போதும், மற்ற அனைத்து தீர்வுகளும் கையிலேயே இருக்கிறது.
இங்கேதான் யோகா முக்கியமாக செயலாற்ற முடியும். பலருக்கும், யோகா என்றதுமே உடலை வளைத்து பல நிலைகளில் நிறுத்தும் பயிற்சிகள் படமாக தோன்றலாம். ஆனால் யோக விஞ்ஞானம் என்று நாம் அந்த கோணத்தில் பேசுவதில்லை. யோகா என்றால் ஒரு பழக்கவழக்கமோ அல்லது உடற்பயிற்சியோ அல்லது உத்தியோ அல்ல. 'யோகா' எனும் சொல் ஒன்றிணைதல் என்ற பொருளை தரும். அதாவது, அனைத்தும் ஒன்றுதான் என்பதை ஒருவர் அனுபவபூர்வமாக உணர்வது. யோக விஞ்ஞானம் என்பது மனிதரின் உள்நிலையை அணுகும் ஆழமான ஒரு தொழில்நுட்பம். படைத்தலில் உள்ள அனைத்துடனும் துல்லியமான ஒத்திசைவுடனும் முழுமையான தாள லயத்திலும் இணைந்திருக்க ஒருவருக்கு இசைவளிக்கிறது. விழிப்புணர்வை மேம்படுத்தி நல்வாழ்வு மற்றும் சுதந்திரமான நிலையில் மனிதகுலம் வாழ்வதை ஒரு வழிமுறையாக வழங்குவதில் இதைவிட முழுமையானதாக வேறு எதுவும் இல்லை.
மதங்களுக்கு முன்பே தோன்றிய யோகா:
மதங்களுக்கு முன்பே யோகா தோன்றிவிட்டது. நமக்குள் பார்த்து, நம்பிக்கைகளையும் முன்முடிவுகளையும் ஓரமாக ஒதுக்கிவைத்தால் உண்மை நிச்சயமாக உதயமாகும் என்பதை இது நினைவூட்டுகிறது. உண்மை என்பது ஒருவர் அடையவேண்டிய இலக்கல்ல, எப்போதுமே இருப்பது. அது இரவைப் பற்றிய நமது அனுபவம் போன்றது: சூரியன் வேறு எங்கோ சென்றுவிடவில்லை; இந்த பூமி பந்து சூரியனைப் பார்க்கும் திசைக்கு எதிர்திசையில் நாம் இருக்கிறோம், அவ்வளவுதான். பெரும்பாலான நேரங்களில், மக்கள் மிக மும்முரமாக எதிர்திசையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! உண்மையிலேயே இந்த உயிரின் தன்மை என்ன என்பதை அறிந்துகொள்ள அவர்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை. யோகா எந்த முடிவையும் வழங்குவதில்லை, சரியான திசையில் செல்வதற்கான திருப்பத்தை வழங்குகிறது.
மனித ஜனத்தொகையின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் உள்முகமாக திரும்பினால், இந்த பூமியில் மனிதர்கள் வாழும் தரம் நிச்சயமாக மேம்படும். குறிப்பாக, இந்த மாற்றமானது உலக தலைவர்களில் சிலருக்கு நிகழ்ந்தால், உலகம் இயங்கும் விதமே நம்பமுடியாத அளவுக்கு மாற்றமடையும். உள்முகமாக திரும்புவது என்றால் ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வது அல்ல. இது ஒரு பரிணாமம். மனிதகுலம் ஆழமான பரிணாமத்தை நோக்கி திரும்ப துவங்கியிருக்கிறது என்பதன் அடையாளமாக சர்வதேச யோகா தினம் அமைந்திருக்கிறது.
சத்குரு யார்? : விளக்கம்:
இந்தியாவின் செல்வாக்குமிக்க ஐம்பது நபர்களில் ஒருவராக அறிப்படும் சத்குரு அவர்கள், ஒரு யோகியாக, மறைஞானியாக, தொலைநோக்குப் பார்வை கொண்டவராக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அதிகளவில் விற்பனையாகும் புத்தக எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார். இந்திய குடிமக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சேவைகளை கௌரவிக்க இந்திய அரசு வழங்கும் உயரிய வருடாந்திர விருதான பத்ம விபூஷண் விருது 2017ம் ஆண்டு சத்குருவிற்கு வழங்கப்பட்டது. நான்கு கோடிக்கும் அதிகமான மக்களைத் தொட்டு உலகின் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக திகழும் விழிப்புணர்வான உலகம் - மண் காப்போம் (Conscious Planet - Save Soil) இயக்கத்தையும் சத்குரு நிறுவியுள்ளார்.