அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Anbumani Walking Rally: "அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்"

பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனை சரியாகிவிடும் என கட்சி தொண்டர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் ராமதாஸின் அடுத்தடுத்த நடவடிக்கையால், கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அன்புமணியின் நடைபயணம்
பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அன்புமணி தனது நடைபயணத்தை தொடங்க உள்ளார். தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’ என்ற பெயரில், 100 நாட்களுக்கு நடை பயணம் நடைபெற உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்திருந்தார்.
காத்திருந்த தொண்டர்கள் - ராமதாஸ் போட்ட குண்டு
என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், கட்சியின் வளர்ச்சிக்காக அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் ஆதரவு தருவார் என்றே கட்சியின் தொண்டர்கள் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் நம்பி வந்தனர். இந்தநிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பாமகவின் தலைமையகம் தைலாபுரம் இல்லத்தில் மட்டும்தான் செயல்படுகிறது வெறெங்குமில்லை என்றும் அன்புமணி நடத்தும் நடைபயணத்தால் வடமாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அதனை தடைசெய்ய வேண்டும் எனவும் ராமதாஸ் காவல்துறையை வலியுறுத்திய சம்பவம் அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொதிக்கும் பாமகவினர்
ராமதாஸின் பேட்டிக்கு பிறகு சமூக வலைதளத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் இரண்டு தரப்பிற்கு இடையே, மோதல் போக்கு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்கள் பலரும், நடை பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் புருஷோத்தமன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், ரவுடித்தனம் செய்து நடைபயணத்தை நிறுத்தலாம் என நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார். எப்படி யாரால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்? என்ன நாலு ரவுடிகளை விட்டு தகராறு செய்வீர்களா? என்ன பழைய மாதிரியே எல்லாம் சாத்திக்கொண்டு சும்மா இருப்பார்கள் என நினைதீர்களா கட்சியோ, நிர்வாகிகளோ, தொண்டர்களோ யாரும் உங்கள் பின்னால் இல்லை. எனவே இந்த உருட்டல், மிரட்டல் வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள் என பதிவு செய்துள்ளார்.
பூம்புகார் மாநாட்டை நிறுத்துங்கள்
அன்புமணி ஆதரவாளர்கள் சிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி மயிலாடுதுறையில் ராமதாஸ் ஆதரவாளர்கள் நடத்தப்பட இருக்கும், பூம்புகார் மகளிர் மாநாட்டை நிறுத்த வேண்டும் என கூறியும் பதிவு செய்து வருகின்றனர். அன்புமணி ஆதரவாளர்களின் பதிவுக்கு எதிராக, ராமதாஸ் ஆதரவாளர்களும் பதில் அளித்து வருவதால், பாமகவிற்குள் நடைபெறும் உட்கட்சி சண்டை தீவிரம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
பிரச்சனை எப்போதுதான் தீரும்?
இதுகுறித்து பாமக ஆதரவாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசியபோது: " தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடைபெறும் பிரச்சனை, இது போக போக சரியாகிவிடும் என்றுதான் நினைத்தோம். ஆனால் பிரச்சனை பெரிதாக்கி கொண்டிருக்கிறதே தவிர, பிரச்சனை சரியானதாக தெரியவில்லை. அன்புமணி நடை பயணத்திற்கு பிறகு மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தனர்





















