தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
பாஜகவில் இணைந்த உடனே தனக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும், அதேபோல் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார் விஜயதரணி.

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு ஒன்றரை வருடம் ஆகியும் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் விஜயின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றவர் விஜயதரணி. தொடர்ந்து ஒரே தொகுதியில் செல்வாக்குடன் இருந்த இவர், தனக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.
நிறைவேறாத ஆசை
ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார் மல்லிகார்ஜூன கார்கே. அதே நேரம் செல்வப்பெருந்தகை இருந்த சட்டமன்ற குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த விஜயதரணியின் அந்த ஆசையும் நிறைவேறாமல் போனது.
பெரிய பொறுப்பு, தேர்தல் வாய்ப்பு
இச்சூழலில்தான் இனிமேல் காங்கிரஸ் கட்சியில் இருந்தால் தமக்கான மரியாதை கிடைக்காது என்று நினைத்து பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜகவில் இணைந்த உடனே தனக்கு பெரிய பொறுப்பு கிடைக்கும், அதேபோல் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார் விஜயதரணி.
ஆனால் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனே போட்டியிட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த விஜயதரணி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. மறுபுறம் விஜயதரணியின் ஆதரவாளர்கள், ’உங்களுக்கு முன்னால் பாஜகவில் இணைந்த குஷ்புவிற்கே இன்னும் எந்த பொறுப்பும் கிடைக்கவில்லை பிறகு உங்களுக்கு எப்படி பொறுப்பு கொடுப்பார்கள்?’ என கொளுத்தி போட்டுள்ளனர்.
தவெகவில் இணைகிறாரா?
இதனால் கடும் யோசனையில் இருக்கும் விஜயதரணி புதிதாக ஒரு கட்சியில் இணைந்து விடலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், புதிதாக கட்சி தொடங்கிய விஜயின் தவெகவில் இணைவதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர். விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனாவிற் தவெகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது அதேபோல், மத்திய அரசு அதிகாரி அருண்ராஜுக்கும் முக்கிய பொறுப்பை வழங்கினார் விஜய்.
இதன் அடிப்படையில் மூன்று முறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் முன்னாள் காங்கிரஸ்காரர் என்ற முறையிலும் தவெகவில் இணைந்தால் தனக்கும் ஒரு முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்றும் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் நம்பிக்கை தெரிவித்து வருகிறாராம் விஜயதரணி.
ஏற்கனவே மருது அழகுராஜ், காளியம்மாள் உள்ளிட்டோர் தவெகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படும் நிலையில் தற்போது விஜயதரணியும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.





















