South Korea President Ousted: பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர்.. யார் நீக்கியது.. எதற்காக தெரியுமா.?
தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக இந்த பதவி நீக்கம்.? பார்க்கலாம்.

தென் கொரி அதிபர் யூன் சுக் யியோலை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எதனால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்.
அவசரநிலை ராணுவ சட்தத்தை அறிவித்த தென் கொரிய அதிபர்
தென் கொரிய அதிபராக இருந்த யூன் சுக் யியோல், எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வதாகவும், வட கொரியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கப் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி இரவு திடீரென அவசரநிலை ராணுவ சட்டத்தை அறிவித்தார்.
அவரது இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, அச்சட்டத்தை திரும்பப்பெறுவதாக அதிபர் யூன் அறிவித்தார். எனினும், அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய மக்கள், தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, அதிபர் யூன் சுக் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில், அதிபர் சதித்திட்டம் தீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, ராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அதிபர் யூன் சுக் கைது செய்ய சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பதவி நீக்கம் செய்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்நிலையில், அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதற்காக, யூன் சுக் யியோல் மீதான வழக்கு அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் இன்று(04.04.25) தீர்ப்பளித்த நீதிமன்றம், தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ராணுவ சட்டத்தை அறிவித்ததன் மூலம், அவர் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டிலும், நாடாளுமன்ற பதவி நீக்க தீர்மானத்தை உறுதி செய்தும் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதிபர் யூன் சுக் யியோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தீர்ப்பை வரவேற்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர். அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியலமைப்பின்படி, இரண்டு மாதங்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

