யாரா இருந்தாலும் பஸ்தான்.. எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் உலக தலைவர்களுக்கே கட்டுப்பாடு
ஆறுபது ஆண்டுகளில் நடைபெறும் பிரிட்டனின் முதல் அரசு இறுதிச் சடங்கில் சுமார் 500 வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் வணிக விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு செல்லுமாறும், அங்கிருந்து ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் மூலம் இறுதி சடங்கிற்கு செல்லமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Politico: World leaders attending the funeral for the Queen have been asked to fly commercial; they can’t use state cars and will instead be bussed in from a site in west London.
— Hamza Shaban (@hshaban) September 11, 2022
“Can you imagine Joe Biden on the bus?” one foreign ambassador complained. https://t.co/0HsEWCm4XI
இந்த இறுதிச் சடங்கில் சுமார் 500 வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 19 அன்று நடைபெறும் இந்த நிகழ்விற்காக பெரிய அளவிலான நடவடிக்கையை அலுவலர்கள் மேற்கொள்வார்கள் என வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் வட்டாரம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
இறுதி சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கு முடிந்த அளவில் ஏதுவாக போக்குவரத்து வசதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு செல்ல தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தவோ ஹெலிகாப்டரில் லண்டன் முழுவதும் பயணிக்கவோ வேண்டாம் என பங்கேற்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்குப் பதிலாக, மேற்கு லண்டனில் உள்ள ஒரு இடத்திலிருந்து அபேவுக்கு தனியார் பேருந்துகள் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு மற்றும் சாலைகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக இப்படி திட்டமிடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், பேருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணத்தால் அவரின் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
அமெரிக்க அதிபர்கள், நீண்ட தூரம் பயணம் செய்ய ஏர்ஃபோர்ஸ் ஒன்னைதான் பயன்படுத்தி வருகின்றனர். அதிபர்கள் பயணம் செய்யவே வடிவமைக்கப்பட்ட போயிங் 747 விமானங்களில் ஒன்றுதான்ஏர்ஃபோர்ஸ் ஒன். பின்னர், பயணத்திற்காக அவர்கள் மரைன் ஒன் ஹெலிகாப்டரையும், "தி பீஸ்ட்" என்று அழைக்கப்படும் கவச லிமோசைனையும்(கார்) பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து அமெரிக்க தூதரகம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. 1965இல் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதி ஊர்வலத்திற்கு பிறகு பிரிட்டன் இதுவரை நடத்திய மிகப்பெரிய அரசு நிகழ்வாக இது இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் பெரும் கூட்டத்தை நிர்வகிப்பதற்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான காவல்துறை அலுவலர்கள் லண்டனுக்கு மீண்டும் பணியமர்த்தப்பட உள்ளனர். இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு நான்கு நாளுக்கு முன்பே தலைநகரின் தெருக்களில் உலக தலைவர்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.