மரக்காணம் கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை உயிரிழப்பு - காரணம் என்ன ?
கடற்கரைகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான உன்மையான காரணத்தை ஆய்வு செய்து கண்டறிந்து வனத்துறை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. இதுபோல் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து அவைகளை பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள் உடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.
இதன் காரணமாக இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இதனால் வழக்கம் போல முட்டையிட நேற்று சுமார் 50 கிலோ எடையுள்ள இரண்டு கடல் ஆமை கரைக்கு வந்துள்ளது. கரைப்பகுதிக்கு வந்த ஆமை குழி தோண்டி முட்டையிட முயற்சியும் செய்துள்ளது. ஆனால் அந்த ஆமை இறந்து உள்ளது. இறந்து கிடந்த ஆமையின் அருகில் முட்டைகளும் சிதறி காணப்பட்டது. இதனால் கடல் பகுதிக்கு முட்டையிட வந்த ஆமை வரும் வழியில் மீனவர்கள் மீன் பிடிக்கும் பைபர் போட்டில் அடிபட்டு விட்டதா அல்லது கரைக்கு வந்தபோது கடற்கரை ஓர சுற்றி திரியும் நரிகள் அல்லது நாய்கள் அதை கடித்து விட்டதா என்பது ஆமையை உடற்கூறு ஆய்வு செய்யும் போது தான் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் கடலில் மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவது மற்றும் கடற்கரை பகுதிகளில் செயல்படும் இறால் குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து வெளிவரும் கழிவுநீர் ஆகியவைகளால் ஆமைகள் இறந்து இருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடற்கரைகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான உன்மையான காரணத்தை ஆய்வு செய்து கண்டறிந்து வனத்துறை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் முட்டையிட வரும் ஆமைகளை பாதுக்காக்க கடலோரத்தில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆய்வாளர்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.