எங்கள் குரலை கேட்பீங்களா? 31ம் தேதி வரை நீட்டிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல் எதற்காக?
நடவு மானியம் பெற விவசாயிகள் எந்திரங்கள் மூலம் மட்டுமே நடவு செய்திருக்க வேண்டும். நடவு செய்யப்பட்ட வயலில் விவசாயி நிற்கும் புகைப்படம் என வேளாண்மைத்துறையினர் கேட்டு கொண்டனர்.

தஞ்சாவூர்: எங்கள் குரலை கேட்பீங்களா... குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கான இலக்கீட்டை உயர்த்தி, வரும் 31ம் தேதி வரை நடவு செய்பவர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குரல் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் எட்டுமா?
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட் டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் நடவு மானியமாக ரூ.4 ஆயிரம் வங்கி மூலம் வழங்கப்படுகிறது.
இந்த நடவு மானியம் பெற விவசாயிகள் எந்திரங்கள் மூலம் மட்டுமே நடவு செய்திருக்க வேண்டும். நடவு செய்யப்பட்ட வயலில் விவசாயி நிற்கும் புகைப்படத்தையும், ஆதார் நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகல், நடவு செய்யப்பட்டதற்கான ரசீது ஆகியவற்றை வழங்க வேண்டும் என வேளாண்மைத்துறையினர் கேட்டு கொண்டனர். இதனால் விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு சென்று அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் தஞ்சை மாவட்டத்துக்கான இலக்கீடு முடிவடைந்து விட்டதாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் கூறியதால், குறுவை பருவத்தில் எந்திரம் மூலம் நடவு செய்துள்ள விவசாயிகள் பலரும் வேதனையும், ஏமாற்றமும் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தற்போதுதான் மும்முரம் அடைந்துள்ளது. கல்லணையில் கடந்த மாதம் 15ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது தான் மாவட்டம் முழுவதும் உள்ள பாசன வாய்க்கால்களில் பாய்ந்து விவசாய நிலங்களுக்கு சென்றுள்ளது இதன்பிறகு தான் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளை தொடங்கி உள்ளனர். குறுவை சாகுபடி என்பது வருகிற 31ம் தேதி வரை நடவு செய்யப்பட்டு வருவதை கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்துக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு 32,450 ஏக்கர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறுவை சாகுபடி என்பது 1.10 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நடவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற ஏதுவாக, எந்திரம் மூலம் நடவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நடவு மானியம் வழங்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்காமல், வருகிற 31ம் தேதி வரை நடவு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் நடவு மானியம் வழங்க வேண்டும். அதே போல் 32,450 ஏக்கர் பரப்பளவு என்ற இலக்கீட்டை உயர்த்த வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு உடனே அதற்கான மானியத்தை காலதாமதம் செய்யாமல் வங்கிகளில் வரவு வைக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா? குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கான இலக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். குறுவை பருவத்தில் எந்திரம் மூலம் நடவு செய்த விவசாயிகள், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயன்பெற ஏதுவாக அதற்கான விண்ணப்பங்களை பெற்று வருகிறோம்.
இம்மாதம் 31ம் தேதி வரை குறுவை சாகுபடி காலம் என்பதால், எந்திரம் மூலம் நடவு செய்த விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களை வழங்கலாம். தற்போது குறுவை தொகுப்பு திட்டத்துக்கான இலக்கீடு முடிந்துவிட்டதாக கூறுவது என்பது தவறு என்று சொல்லியிருக்காங்க. எது எப்படி இருந்தாலும் ஊருக்கே சோறு போடும் விவசாயிகளின் கோரிக்கை குரல் அரசுக்கு எட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.





















