குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்; பள்ளி செப்டிக் டேங்கில் குழந்தை விழுந்தது எப்படி?
Vikravandi: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்து உயிரிழந்த குழந்தையை பள்ளி நிர்வாகத்தினரே மீட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் எல்கேஜி குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் செப்டிக் டேங்கிலிருந்து குழந்தையை பள்ளி நிர்வாகத்தினரே மீட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மைய ஒப்பந்த பணியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். பழனிவேலுக்கும் சிவசங்கரி தம்பதிக்கும் பிறந்த மூன்று வயது பெண் குழந்தை லியா லட்சுமி விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். வழக்கம் போல் இன்று குழந்தையை பள்ளியில் பெற்றோர் குழந்தை விட்டு சென்றுள்ளனர்.
குழந்தையானது 1.50 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகிலுள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை கழிவறைக்கு சென்றுவிட்டு அருகிலுள்ள செப்டிக் டேங்க் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது குழந்தை செப்டிக் டேங்க் மீது ஏறியுள்ளதாக தெரிகிறது. டேங்க் மீது போடப்பட்ட இரும்பு தகடு மூடி முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. துரு பிடித்து இருந்ததால் குழந்தையின் பாரம் தாங்காமல் குழந்தை செப்டிக் டேங்க் மூடி உடைத்து கொண்டு உள்ளே விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கிறார். செப்டிக் டேங்க் உள்ள பகுதி அருகிலுள்ள கட்டிடத்தில் வகுப்பு எடுத்திருந்த குழந்தையின் ஆசிரியர் ஏஞ்சல் நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் கழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததை பார்த்தபோது உள்ளே குழந்தை இறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினரே செப்டிக் டேங்க்கில் இருந்த குழந்தையை இரண்டு கம்புகள் பயன்படுத்தி மேலே தூக்கி குழந்தை மீட்டு கார் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை செய்தனர். அப்போது குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்ததை மீட்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரனை செய்தனர்.
அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஏற்கனவே ஆய்வு செய்ததில் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை செய்யாத அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை:-
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையை செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்யத் தவறிய தனியார் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாக கூறுகின்றன. அதையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.
மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.