EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
"எடப்பாடி பழனிசாமி ஒரு விமானத்திலும், எஸ்.பி.வேலுமணி இன்னொரு விமானத்திலும் தனித் தனியாக டெல்லிச் செல்வது ஏன்? இருவருக்கும் ஒரே விமானத்தில் டிக்கெட் கிடைக்கவில்லையா?”

சட்டப்பேரவை நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், அவசர, அவசரமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருப்பது அரசியல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திடீர் டெல்லி விஜயம் ஏன் ? என்ன காரணம் ?
டெல்லியில் தான் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த அதிமுக அலுவலகத்தை பார்வையிடப்போகிறேன் என்ற போர்வையில் பாஜகவின் முக்கியமான தலைவர்களை அவர் ரகசியமாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் அமையவுள்ளதற்கான அச்சாரமாக இந்த பயணம் இருக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
அமித் ஷாவுடன் சந்திப்பா?
அதிமுக அலுவலகத்தை பார்க்க செல்வதாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை நடைபெறாத சனி அல்லது ஞாயிறு அன்று கூட சென்றிருக்கலாம். ஆனால், பரபரப்பாக மானியக்கோரிக்கை நடந்துக்கொண்டிருக்கும் சூழலில் அவர் செவ்வாய்க்கிழமையான இன்றே டெல்லிக்கு சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவருமான அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமித் ஷாவின் அப்பாயிண்மெண்ட் கிடைத்ததாலேயே எடப்பாடி பழனிசாமி அவசர, அவசரமாக டெல்லி சென்றுள்ளார் என்றும் அமித் ஷா மட்டுமில்லாமல் பாஜகவின் இன்னும் சில முக்கிய நபர்கள் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரையும் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் வைத்து சந்தித்து பேசவுள்ளதாக தெரிகிறது.
எஸ்.பி.வேலுமணியும் பயணம்
எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு விமான ஏறிய சில மணி நேரங்களில் அடுத்த விமானத்தை பிடித்து டெல்லிக்கு பறந்திருக்கிறார் அதிமுகவின் கொறடாவும் தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி. எஸ்.பி.வேலுமணியை பாஜக இயக்குகிறது, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய்நகர்த்தி வருகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற சில மணி நேரங்களிலேயே அவரும் டெல்லி சென்றிருக்கிறார்.
ஒரே விமானத்தில் டிக்கெட் இல்லையா ?
எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது நேற்றே உறுதியாகிவிட்ட நிலையில், எஸ்.பி.வேலுமணியும் அவருடனே ஒரே விமானத்தில் சென்றிருக்கலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி தனியாகவும், வேலுமணி தனியாகவும் வெவ்வேறு விமானத்தில் ஏன் சென்றனர் என்ற சந்தேகமும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரே விமானத்தில் செல்ல இருவருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லையா ? அல்லது வேறு காரணங்களால் இருவரும் ஒன்றாக இணைந்து பயணிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி உறுதி ; தேதி பின்னர் அறிவிக்கப்படும்
சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தப்போது, பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. முன்னரெல்லாம் பாஜகவுடன் கூட்டணி எப்போதும் இல்லையென்று சொல்லிவிட்டோம். அப்படி ஒரு கேள்வியே தவறு என்ற ரீதியில் பதில் சொல்லி வந்த அவர், அப்போது அதற்கு மாறாக, இந்த கேள்வியை இன்னும் ஆறு மாதம் கழித்து வந்து கேளுங்கள் என்று சொல்லி அதனை கடந்துப்போய்விட்டார்.
இதன்மூலம், பாஜகவுடனான கூட்டணியை அவர் தவிர்க்க முடியாமல் இருக்கிறார். வேறு வழியின்றி பாஜவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்க இருக்கிறது என்று அப்போதே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய அவரது டெல்லி பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















