Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
கேபினட் அளவில் இருக்கும் முகமையை மூடுவது சரியான முடிவாக இருக்காது என்று எதிர்க்குரல்கள் எழுந்து வருகின்றன.

அமெரிக்கக் கல்வித் துறையை மூட அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளதாக வெள்ளை மாளிகையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க நாட்டின் கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து இட உள்ளதாகவும் துறையை மாகாணங்களின் பட்டியலுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே வேளையில் அமெரிக்க மாணவர்கள் நம்பியிருக்கும் சேவைகள், திட்டங்கள் மற்றும் சலுகைகளை திறம்பட மற்றும் தடையின்றி தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் செயலாளர் லிண்டா மெக்மேஹனுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
என்ன காரணம்?
அமெரிக்க நாட்டின் மத்தியக் கல்வித்துறை பள்ளிகளுக்கும் கல்விக் கடனுக்கும் 1.6 ட்ரில்லியன் தொகையை அளிக்க வேண்டி உள்ளது. இதனால், அனைத்து நிர்வாகத்தையும் மாகாண அரசுகளிடம் ஒப்படைக்க ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். எனினும் இம்முடிவுக்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளப்பியுள்ளது. கேபினட் அளவில் இருக்கும் முகமையை மூடுவது சரியான முடிவாக இருக்காது என்று எதிர்க்குரல்கள் எழுந்து வருகின்றன.
காங்கிரஸ் ஒப்புதல் அவசியம்
ட்ரம்ம்பின் ஆலோசகர் எலோன் மஸ்க்கின் ஆலோசனை அடிப்படையிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல், கல்வித் துறையை மூட முடியாது என்றே கூறப்படுகிறது.
அமெரிக்க கல்வித் துறை, மாணவர்களின் கல்விக் கடன்களை கவனித்துக் கொள்வது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உணவு, உதவித் திட்டங்களில் முக்கியப் பங்காற்றுகிறது.
IT’S HAPPENING 👀 pic.twitter.com/GB4ueE9eiD
— Libs of TikTok (@libsoftiktok) March 19, 2025
அந்நாட்டுக் கல்வித்துறையின் கீழ் சுமார் ஒரு லட்சம் பொது பள்ளிகளும் 34 ஆயிரம் தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளின் செலவீனங்களில் 86 சதவீதத்தை மாகாண அரசுகளே கவனித்து வருகின்றன. இருப்பினும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அமெரிக்க மத்தியக் கல்வித் துறை கவனித்து வருகிறது. அமெரிக்கப் பள்ளிகளின் நிதிநிலை அறிக்கையில் சுமார் 14 சதவீதம் அளவுக்கே மத்திய நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

